சிவகார்த்திகேயன் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் ரெமோ. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்திலும் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக செலவில் உருவான படமும் இதுதான். இப்படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், படத்தின் வசூல் சிறப்பாகவே அமைந்துள்ளது.
இந்நிலையில், ரெமோ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் சிவகார்த்திகேயன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசி கண்கலங்கினார். தான் செய்யும் வேலையை யாரோ தடுப்பதாக ஒரு குற்றச்சாட்டையும் வைத்தார். சிவகார்த்திகேயனின் உணர்ச்சிகரமான பேச்சு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி காஞ்சிபுரத்தில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், சிவகார்த்திகேயன் விவகாரம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதிலளிக்கும்போது, சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும். சக நடிகனாக நான் அவருக்கு துணை நிற்கின்றேன். இதுதொடர்பாக, நடிகர் சங்கத்திலும் புகார்கள் வந்துள்ளது. அந்த புகார்கள் மீது நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் சினிமாவில் பல துறைகளில் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கின்றது. சிவகார்த்திகேயன் போன்று ஒருகாலத்திலும் நானும் பிரச்சினைகளை சந்திதேன் என்று பேசினார்.
இந்த பிரச்சினையில் சிம்புவும் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் இது தொடர்பாக தெரிவிக்கும்போது , கவலைப்படாதே சிவா, இந்தப் பிரச்சினை உனக்கு மட்டும் நேர்ந்துவிடவில்லை. இந்த மாதிரி பிரச்சினை செய்பவர்வள் யார் என்று எனக்கும் தெரியும்.
பிரச்சினை செய்கிறவர்களுக்கு அது மட்டும்தான் செய்யத் தெரியும். நம்முடைய குறிக்கோள் கடின உழைப்பு ஒன்று மட்டுமே. மற்றதையெல்லாம் கடவுளிடம் விட்டுவிடு, அவர் பார்த்துக் கொள்வார் என்று சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.






