அமெரிக்க விமானங்களில் இந்த வகை போன்களை கொண்டு செல்ல முடியாது!!

267

mobile

விமானப் பயணத்தின்போது பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் சம்சுங் நிறுவனத்தின் கலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்ஃபோன்களைக் கொண்டு வர தடை விதிப்பதாக அமெரிக்க அரசு அதிரடியாக அறிவித்தது.

இதுகுறித்து அமெரிக்கப் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:

சம்சுங் நிறுவனத்தின் கலக்ஸி நோட்-7 ரக ஸ்மார்ட்ஃபோன்கள் திடீரென தீப்பிடிப்பதாக எழுந்த புகாரையடுத்து விமானங்களில் அதன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

இந்த வகை செல்லிடப்பேசிகளை பயணிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் விமானப் பயணத்தின்போது எடுத்துவர தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த வகை செல்லிடப்பேசிகளை சரக்கு விமானங்களிலும் கொண்டு செல்லக் கூடாது. இந்த உத்தரவு சனிக்கிழமை (அக்.15) நண்பகல் முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த உத்தரவை மீறும் பயணிகளிடமிருந்து கலக்ஸி நோட்-7 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்படும் என்பதோடு, அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்.

இந்த தடை உத்தரவால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படும் என்றாலும், பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி இந்த தடை உத்தரவு உடனடியாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்கப் போக்குவரத்து அமைச்சகம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனம், கேலக்ஸி நோட்-7 ரக ஸ்மார்ட்ஃபோன்களை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. இந்த செல்லிடப்பேசிகளில் பொருத்தியுள்ள பேட்டரிகள் திடீரென வெடித்து தீப்பிடிப்பதாக உலகின் பல்வேறு இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 25 இலட்சம் கேலக்ஸி நோட்-7 ரக செல்லிடப்பேசிகளைத் திரும்ப பெறுவதாக அறிவித்ததுடன், அதன் தயாரிப்பை முற்றிலும் நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.