வவுனியாவில் பெண்களை இலக்குவைத்து சுரண்டும் நிதி நிறுவனங்களை இழுத்துமூட அறைகூவல்!!

584

111

வடக்கில் உழைக்கும் பெண்களை இலக்குவைத்து சுரண்டி சீரழிக்கும் நுண்நிதி (மைக்ரோ கிரடிற்) நிறுவனங்களை இழுத்து மூட அணி திரளுமாறு சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் வாகன இலகு கொடுப்பனவு (லீசிங்) என்ற பெயரில் மக்களை சுரண்டி கொள்ளையிடும் நிறுவனங்களுக்கு எதிராகவும் கிராம மட்டங்களில் குடும்பங்களின் நிரந்தர வருமானத்தை ஏற்படுத்த வலியுறுத்தியும் நாளை 17.10.2016 காலை 10.00 மணிக்கு வவுனியா மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

வறுமை ஒழிப்பு மற்றும் சுயதொழில் விருத்திக்கு உதவி என்ற பெயரில் நுண்கடன் நிதி நிறுவனங்கள் பெண்களை இலக்கு வைத்து கொடுக்கும் சிறுகடன்கள் பல குடும்பங்களை சிதைத்துள்ளது.

பல கிராமங்களில் கடன்பெற்ற குடும்பங்கள் அதை மீளச்செலுத்த முடியாத நிலையில் தூர பிரதேசங்களுக்கு இடம்பெயர்கின்றனர். சில பெண்கள் தற்கொலை என்னும் தீர்வை நாடியுள்ளனர்.

அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக விவசாயமும் சிறு தொழில்களும் நாசமாக்கப்பட்டு வலுவிழந்து வரும் நிலையில் அரசு உடனடியாக நிதி நிறுவனங்களை மூடுவதுடன் சமூர்த்தி வங்கி, கூட்டுறவுச்சங்கங்கள், கிராமிய வங்கிகள் ஊடாக மக்களுக்கு சிறு கடன்களை வழங்க முன்வரவேண்டும்.

2014 ஆண்டு நாட்டின் உற்பத்தியில் 42 சதவீத பங்களிப்பினை வழங்கும் மேல் மாகாணத்தை விட மிகக்குறைவாக நாட்டின் உற்பத்தியில் 04 சதவீத பங்கினை வழங்கும் வட மாகாணத்தில் உள்ள நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இது வடக்கு மக்களை திட்டமிட்டு சுரண்டுகிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி நிற்கிறது.

ஒரு சமூகத்தை சிதைக்க வேண்டுமென்றால் அச்சமூகத்தின் பெண்களை சிதைத்தால் அது சாத்தியமாகும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நுண் நிதி கடன் திட்டங்களின் மூலம் பெண்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி ஆரோக்கியமான குடும்பத்தின் ஆணிவேராக திகழும் பெண்களை சீரழிப்பதன் ஊடாக எமது சமூகத்தை ஊனமாக்க செயல்ப்படும் சக்திகளுக்கு எதிராக ஒக்டோபர் 17 காலை 10 மணிக்கு வவுனியா மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு எமது பெண்களை கடன் சுமையிலிருந்து மீட்டெடுக்கும் எழுச்சியில் எல்லோரும் அணி திரளுமாறு சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு அறைகூவல் விடுக்கிறது.

aaa aaaa aaaaa aaaaaa aaaaaaa