ஜெனிவாவில் தீக்குளித்து இறந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்!!

509

jaffna

ஜெனிவாவில் நேற்று அதிகாலை ஒருவர் தீக்குளித்ததாக செய்திகள் வந்தன. இருந்தபோதிலும் அவர் இலங்கையரா என்பதனை உறுதிப்படுத்த முடியாதிருந்தது. ஆனால் அந்நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தமிழர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேரில் கண்ட சாட்சியம். ஜெனிவாவில் உள்ள தமிழர் ஒருவர் நடந்ததை விபரித்துள்ளார். நேற்று சில நண்பர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஐநா முன்றலில் அந்த தோழர் தீக்குளித்த இடத்தில் அவர் யார் இன்னார் என்ற அடையாளங்கள் ஏதும் அறியாமலே மலரஞ்சலி செலுத்தி விட்டு நின்றிருந்தோம்.

அருகே 24X7 தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரபு தேசத்து இளைஞர்கள் அதிகாலை நடந்த தாங்கள் கண்ட அந்த சம்பவத்தை எங்களிடம் விளக்கிக் கொண்டு இருந்தார்கள்.



ஒரு மாநிறமான இளைஞன் இங்கே இரவு பன்னிரெண்டு மணியில் இருந்து சுற்றிக் கொண்டு இருந்தான். சரியாக அதிகாலை 1.30 மணி அளவில் ஒரு போத்தலில் இருந்து அடர்த்தியான ஜெலி போன்ற திரவத்தை எடுத்து தன் மீது பூசிக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் கொளுத்தி கொண்டான்!

கொழுந்து விட்டு சுவாலையாக எரியும் போது எந்த சலனமும் இன்றி சில கோஷங்களை மட்டும் சொல்லிவிட்டு ஒரே இடத்தில் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று எரிந்து முடித்து கீழே விழுந்தான். ஐநாவை சுற்றி பாதுகாப்பு பணியில் இருக்கும் கமோண்டோக்கள் அவனை நெருங்கும் போது கீழே சாய்ந்து விட்டான்.

பின்னர் காவல் துறையினர் எங்களை விலக்கி விட்டு அவன் தன்னுடன் கொண்டு வந்திருந்த பையையும் காகிதங்களையும் எடுத்துகொண்டு எரிந்த அந்த நபரை அம்புலன்சில் ஏற்றி சென்று விட்டார்கள். எரிந்தவன் அருகே ராணுவ தளபதி உடையில் இருக்கும் தமிழர்களின் தலைவர் ஒருவர் படம் இருந்ததை மட்டுமே எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது என்று மயிர்க்கூச்செறியும் அந்த சம்பவத்தை விளக்கி கொண்டு இருந்தார்கள்!

இதற்கு இடையில் சுவீஸ் காவல்துறை தீக்குளித்தவரின் உடலருகே தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் படம் இருந்தது உண்மைதான் ஆனால் இறந்தவர் திபெத்தியராக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று சில உள்ளூர் செய்தி ஏடுகளின் மூலம் எங்களை குழப்பிவிட்டு இருந்தது.

இவ்வாறு குழம்பிய நிலையில் அது யாராக இருந்தாலும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக உயிர்க்கொடை செய்தவனுக்கு வீரவணக்கம் செய்வதில் தவறில்லை என்று மலரஞ்சலி செலுத்திவிட்டு அந்த இடத்தில் நின்றிருந்த போது ஒரு தமிழ் இளைஞர் சற்று பதட்டத்துடன் காரில் வந்து இறங்கினார். அவருடன் அவர் மனைவி மற்றும் ஒரு யுவதி மேலும் பிள்ளைகள் வந்திருந்தார்கள்!

காரில் வந்து இறங்கிய இளைஞர் தன் மச்சினனை நேற்று இரவில் இருந்து காணவில்லை, காரில் இருக்கும் யுவதியின் கணவன்தான் அவன், வயது 34 அவன் தீவிர ஈழ உணர்வாளன். இங்கே ஒருவர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்து பக்கத்து மாகாணத்தில் இருந்து வருகிறோம். தீக்குளித்தவரை யாராவது பார்த்தீர்களா என்று எங்களை நோக்கி கேள்வி எழுப்பினார். அவர் தன்னோடு கொண்டு வந்திருந்த அவருடைய மச்சினன் படத்தையும் நீட்டினார்!

நான் முன்பே இறந்த அந்த தோழரின் உடலை பார்த்து இருந்ததால் காரில் இருந்த இரு யுவதிகளின் தவிப்பையும் குழந்தைகளின் ஏக்கத்தையும் பார்த்தவாரே அவர் கொண்டு வந்திருந்த வீசா புகைப்படத்தை எட்டி பார்த்தேன், அதிர்ச்சி நெஞ்சில் இடியாய் இறங்கியது. அதற்கு மேல் அந்த இடத்தில் நிற்கும் துணிவு என்னிடம் இருந்திருக்கவில்லை.

ஆனாலும் இறந்த செந்தில்குமரன் ஏதாவது கோரிக்கைகளை விடுத்துள்ளாரா? ஏன், எதற்காக இவ்வாறு செய்தார் என்பது இதுவரையில் தெரியாமல் உள்ளது. பொலிஸார் எடுத்துச் சென்ற பையும் காகிதங்களிலும் ஏதாவது செய்தியினை தீக்கிரையான செந்தில்குமரன் விட்டுச் சென்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் பொலிஸார் அவ்விபரங்களை இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!.