இலங்கையின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை காற்று தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.உலக வெப்ப அதிகரிப்பினால் வடக்கு, தெற்கு அரைக்கோளங்களில் இருந்து வரும் காற்று சந்திக்கும் பகுதியில் ஏற்படும் தாழமுக்கம் இலங்கையின் வளிமண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இடியுடன் கூடிய மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது இடைப்பருவப்பெயர்ச்சி காலநிலை ஆகும். மாலை இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை மின்னல் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.75 -100 மில்லிமீற்றர் வரையிலான மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்று மின்னல் இடியுடன் கூடிய மழை தொடரும் என்று அறிவித்துள்ளது.
தற்போது உலகின் சூழல் பிரச்சினையான புவிவெப்பமடைதல் காரணமாக இயற்கை விபத்துக்களின் அதிகரிப்பும் சமநிலையின்மையும் அதிகரித்து வருகின்றது.மக்கள் பாதுகாப்பாக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் சிரேஷ்ட வானிலை ஆய்வாளரும் முன்னாள் வானிலை அவதான நிலையப் பணிப்பாளருமான கே.ஆர்.அபயசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இலங்கையில் கடும் வறட்சி நிலவி வந்ததன் பின்னர் கன மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.