சேலம் ஜங்சனை அடுத்த வெள்ளக்கல்பட்டியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது56). நிதி நிறுவனம் நடத்தி வந்த இவர் காங்கிரஸ் கட்சியில் விவசாய அணி மாநில துணை தலைவராகவும் இருந்தார். சதாசிவம் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இது குறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ஜார்ஜ், சூரமங்கலம் உதவி கமிஷனர் விஜய்கார்த்திக்ராஜா, இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சதாசிவத்தின் மனைவி தங்கம் (வயது 50) கணவரை உருட்டுக் கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை கைது செய்த போலீசார் சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட தங்கம் பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார். இதன் விவரம் வருமாறு..
சதாசிவம் கடந்த சில வருடங்களாக பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்தார். இதில் அவருக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்ட நிலையிலும் தொடர்ந்து அவர் பங்கு சந்தையில் முதலீடு செய்தார்.
இது தவிர உறவினர்கள், நண்பர்கள் பலரிடம் சதாசிவம் கடன் வாங்கி வந்தார். இதை அறிந்த தங்கம், கணவரை கண்டித்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதை அறிந்த சதாசிவத்தின் மகள் பிரியா பெற்றோர் வீட்டிற்கு வந்து இருவரையும் சமாதானம் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி இரவு சதாசிவம் தாமதமாக வீட்டிற்கு வந்தார். பின்னர் அவரது அறைக்கு சென்று தூங்க சென்றார். அப்போது அவருக்கும், தங்கத்திற்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
இதில் கோபம் அடைந்த சதாசிவம், தங்கத்தின் வயிற்றில் காலால் எட்டி உதைத்தார். இதில் தங்கம் கீழே விழுந்து வயிற்று வலியால் அலறி துடித்தார். அப்போதும் விடாமல் சதாசிவம் அவரை சரமாரியாக தாக்கினார்.
இதில் கோபம் அடைந்த தங்கம் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என கேட்டார். இதனால் மேலும் கோபம் அடைந்த சதாசிவம் மீண்டும், மீண்டும் தங்கத்தை தாக்கினார்.
இதனால் தங்கம் அவரிடம் இருந்து தப்பி மற்றொரு அறைக்கு ஓடினார். அங்கும் சதாசிவம் சென்று தங்கத்தை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த தங்கம் அந்த அறையில் கிடந்த கட்டையை எடுத்து சதாசிவத்தின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் சதாசிவத்திற்கு பலத்த அடிப்பட்டது.
சிறிது நேரத்தில் அவர் அப்படியே மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கம் , சதாசிவத்தை தூக்கி சென்று வழக்கமாக சதாசிவம் படுக்கும் அறையில் படுக்க வைத்தார்.
பிறகு என்ன செய்வது என தெரியாமல் திகைத்த அவர் மற்றொரு அறையில் படுத்து இருக்கும் தனது மகளிடம் சொன்னால் திட்டுவாள் என எண்ணி அழுதபடி சதாசிவம் அருகில் அமர்ந்து இருந்தார்.
இதற்கிடையே சதாசிவம் இறந்து விட்டார். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த தங்கம் மற்றொரு அறையில் கிடந்த கயிற்றை எடுத்து வந்து சதாசிவத்தின் கழுத்தில் கட்டிவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார் என மற்றவர்களிடம் கூறி விடலாம் என நினைத்து கயிற்றை கட்டினார்.
பிறகு தங்கம் , சதாசிவத்தின் உடலை கெட்டியாக பிடித்து கொண்டு விடிய விடிய கதறி அழுதபடி இருந்தார். அதிகாலை 5 மணி அளவில் தங்கத்தின் மகள் பிரியா குழந்தைகளுக்கு உணவு கொடுக்க சமையல் அறைக்கு சென்றார்.
தனது தாயார் அழும் சத்தத்தை கேட்டு தந்தையின் அறைக்கு ஓடி சென்று பார்த்தார். அங்கு சதாசிவம் இறந்து கிடந்ததையும், அவரது கழுத்தில் கயிறு இருந்ததையும் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது தங்கம் , மகளிடம் நள்ளிரவில் சதாசிவம் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தார். இது உண்மை என நம்பிய அவரும் ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தார்.
அடுத்த சில நிமிடங்களில் வீட்டுக்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர், சதாசிவத்தின் தலையில் ரத்த காயம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சூரமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சென்று சதாசிவத்தின் உடலை மீட்டு, தங்கத்தை கைது செய்தனர்.
சதாசிவம் கொலையில் ஒரு சில மணிநேரத்தில் துப்பு துலக்கி மனைவி தங்கத்தை கைது செய்த உதவி கமிஷனர் விஜய்கார்த்திக்ராஜா மற்றும் போலீசாரை போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் பாராட்டினார்.






