ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது.அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு பேராசிரியர் ஹைட் வான் டெர் பிளாஜ் தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் அறிக்கை ஏஐஎம் என்ற மருத்துவ இதழில் வெளியானது.
அதில் இடம்பெற்ற விபரங்கள்:
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை.
ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.
2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது நீண்ட நடைபயிற்சி ஆகியவையும் அவசியம்தான்.
ஆனால், அவற்றை விட மிக முக்கியமானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது. உட்கார்ந்தே இருந்தால் பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அலுவலக நேரத்தில் எத்தனை முறை முடியுமோ 20 முதல் 30 வினாடிகள் வரை எழுந்து நிற்கலாம். போன் பேசும் போது நிற்கலாம். லிப்ட், எஸ்கலேட்டரை தவிர்த்து படிகளில் ஏறலாம். இமெயில், இன்டகொம் தகவல் பரிமாற்றம் தவிர்த்து நேரில் சென்று பார்க்கலாம்.
ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடங்கள் நடக்கலாம். குறைந்தபட்சம் உட்கார்ந்த பொசிஷனை மாற்றி தோள்பட்டையை அசைத்து, நீண்ட மூச்சிழுத்து விட்டு தசைகள் அழுத்தத்தை ரிலாக்ஸ் செய்யலாம்.
ஆய்வில் கவனிக்க வேண்டிய விடயங்கள்:
45 வயதுள்ள 2 லட்சம் பேரிடம் 2009 முதல் 2013 வரை, 5 ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டது.
ஒரு நாளில் 3 மணி நேரம் வரை உட்கார்ந்திருப்பவரை விட 6 மணி நேரம் உட்கார்ந்திருப்பவர் 15 ஆண்டுகளுக்குள் இறக்க நேரிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி நேரம் மட்டுமின்றி ஓய்வை சேர்த்து ஒருநாளில் 90 சதவீத நேரத்தை பெரும்பாலோர் உட்கார்ந்தே செலவிடுகின்றனர். இது முற்றிலும் ஆபத்தானது.