ஸ்பெய்னைச் சேர்ந்த பெண்ணொருவர் 62 வயதில் குழந்தை பிரசவித்துள்ளார். லீனா அல்வேரெஸ் எனும் இப்பெண் ஒரு மருத்துவர் ஆவார். செயற்கைக் கருத்தரிப்பு முறையில் இவர் குழந்தை பிரசவித்துள்ளார்.
ஸ்பெய்னின் லூகோ நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த 10 ஆம் திகதி பெண் குழந்தையொன்றை லீனா அல்வேரெஸ் பிரசவித்தார். சிசேரியன் முறையில் இக்குழந்தை பிறந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை இக்குழந்தையுடன் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் லீனா அல்வேரெஸ். இவருக்கு ஏற்கெனவே இரு பிள்ளை கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 27 வயது. இரண்டாவது மகனுக்கு 10 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
லீனா அல்வேரெஸ் 61 வயதில் கருத்தரித்தமையானது, ஸ்பெய்னில் சர்ச்சையை ஏற்படுத்தியது. செயற்கை முறை கருத்தரிப்புக்கு அதிகபட்ச வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என சிலர் வலியுறுத்தியிருந்தனர்.
எனினும், தனது மகள் ஆரோக்கியமாக வுள்ளதாகவும் தான் மிக மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் லீனா அல்வேரெஸ் கூறுகிறார். வயதான பெண்கள் குழந்தைகளைப் பெறுவதற்கு தயங்கக்கூடாது எனவும் அவர் கூறுகிறார்.







