தெற்காசியா முழுமைக்கும் உடற்பருமனால் பாதிக்கப்படும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடற்பருமன் மன அழுத்தத்தை தோற்றவிப்பதுடன், மனித வளத்தை முற்றாக அழிக்கும் காரணியாகவும் மாறிவிடுகிறது. அத்துடன் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் உருவாகவும் காரணமாக அமைந்துவிடுகின்றன.
அதே சமயத்தில் உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் உடல் எடையை குறைக்க தீர்மானிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்காக எளிய சிகிச்சை முறையை எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் உடற்பருமனை குறைக்க நவீன சிகிச்சையாக அல்ட்ரா சவுண்ட் கேவிட்டேசன் என்ற சிகிச்சை முறை அறிமுகமாகியிருக்கிறது.
இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அல்ட்ரா சவுண்ட் கேவிட்டேசன் என்ற நவீன சிகிச்சை மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு சிறுநீரக அமைப்பின் மூலமாகவே இயற்கையாக வெளியேற்றப்படுகின்றன. இது ஒரு சத்திர சிகிச்சையல்ல. இது ஒரு மயக்க மருந்து கொடுத்து மேற்கொள்ளப்படும் சிகிச்சையும் அல்ல. சிறுதுளை சத்திர சிகிச்சையும் அல்ல. இதனால் தோலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
எங்கே கொழுப்புகள் அதிகமாக இருக்கின்றதோ அங்கே இந்த அல்ட்ரா சவுண்ட் ஊடுகதிர்கள் மூலம் அதிர்வுகள் செலுத்தப்படுகின்றன. அவை தேவையற்ற கொழுப்புகளை (stubborn pockets of fats) உடைத்து, கரைத்து சிறுநீரகத்திற்கு அனுப்பி வெளியேற வைக்கின்றன. அதனால் முற்றிலும் பாதுகாப்பான முறையிலேயே இந்த சிகிச்சை அமைந்திருக்கிறது எனலாம். இந்த சிகிச்சைக்கு பின் பக்கவிளைவு ஏதுமில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சிகிச்சைக்கு பின் ஒரு வருட காலம் கண்காணிப்பு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஒரு வருடக்காலத்தில் மருத்துவர்களின் பரிந்துரையை நீங்கள் முழுமையாக பின்பற்றினால் எதிர்காலத்தில் உடற்பருமன் உங்களுக்கு வராமல் போகக்கூடிய வாய்ப்பு உண்டு. பொதுவாக இந்த சிகிச்சை ஒவ்வொரு நோயாளி உடல் எடை மற்றும் உயரத்தைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று மாதங்களில் பலன்கள் தெரியத் தொடங்கும். உடற்பருமனை அலட்சியப்படுத்தாதீர்கள். அலட்சியப்படுத்தினால் இதயசெயலிழப்பும் ஏற்படக்கூடும்.