தீபாவளித் திருநாள் : புராண வரலாறு!!

638


deevali

தீபாவளி என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடிக்கச் செய்தும், தீபங்களாக ஒளிரச் செய்தும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.சரி நம்மில் எத்தனை பேருக்கு தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி தெரியும், இதோ உங்களுக்காக தீபாவளி தோன்றிய வரலாறு..

விஷ்ணு அவதாரமான கிருஷ்ணர் கொடிய நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் நாளே தீபாவளியாம். பிரக்யோதிஷ்பூர் என்ற பகுதியின் மன்னனாக இருந்த நரகாசுரன் பொதுமக்களுக்கும், தேவர்களுக்கும் எண்ணற்ற தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.பூதேவியின் மகனான நரகாசுரன், பிரம்மாவை வேண்டி கடும் தவம் இருந்து தனது தாயைத் தவிர வேறு யார் கையாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றவன். கடவுள்களின் அன்னையாகக் கருதப்படும் அதிதியின் காது வளையங்களை திருடியும், ஏராளமான பெண்களை சிறை பிடித்தும் துன்புறுத்தி வந்தான்.நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் தேவர்களும், கடவுள்களும் கிருஷ்ணரைச் சந்தித்து முறையிட்டனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.


நரகாசுரனை ஒழிக்க கிருஷ்ணரே நேரடியாக களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் பற்றி அறிந்த கிருஷ்ணர் தனது ரத சாரதியாக மனைவி பூதேவியின் மறுஉருவமான சத்யபாமாவை அழைத்துச் சென்றார்.

நரகாசுரனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற போரின் போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணர் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா வில்லை எடுத்து அம்பைத் தொடுத்து நரகாசுரனை குறிவைத்து ஏவுகிறார். நகராசுகரன் வீழ்கிறான்.


பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும் அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான் எண்ணை தேய்த்து தலை முழுகினார்.

அந்த நாளே தீபாவளியாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்படுகிறது.

இராவணனை வீழ்த்தி அயோத்திக்கு ராமர், சீதையுடன் திரும்பிய நாளாகவும் தீபாவளி குறித்து ம‌ற்றொரு புராண‌க் கதை கூறப்படுகிறது.

அமாவாசை நாளில் ராமர் அயோத்திக்கு வருவதை அறிந்த மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வரவேற்றதாலேயே தீப ஒளித் திருநாளாகக் கொண்டாடப்படுவதாக அ‌ந்‌த‌க் கதை தெரிவிக்கிறது.


புராண வரலாறு எதுவானாலும் தீபாவளியை உவகையுடன் கொண்டாடுவோம். வாழ்வில் உன்னதம் பெறுவோம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.