அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மிருக வைத்தியர்கள் மற்றும் மிருக வைத்தியத்துறை மாணவர்கள் சிலர் கலண்டர் ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர். மன அழுத்தங்கள் தொடர்பான கவனத்தை ஈர்த்து தற்கொலைகளை தடுப்பதே இதன் நோக்கமாம்.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிருக வைத்தியத்துறை மாணவ,மாணவிகளும் தகுதி பெற்ற மிருக வைத்தியர்களுமே இவ்வாறு போஸ் கொடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொள்பவர் களில் வேறு துறைகளை சார்ந்தவர்களைவிட மிருக வைத்தியர்களின் சதவீதம் அதிகமாக உள்ளது என அவுஸ்திரேலிய மிருக வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மிருக வைத்தியர்கள் தத்தமது அந்தரங்க உளவியல் பிரச்சினைகள் குறித்து மற்றவர்களுடன் கலந்துரையாடுவதை ஊக்குவிப்பதன் மூலம் தற்கொலைகளை தடுப்பதற்கு ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக மிருக வைத்தியத்துறை மாணவ, மாணவிகள் திட்டமிட்டனர்.
இதனடிப்படையிலேயே தமது அந்தரங்கங்களை வெளிப்படுத்துவதற்கு அவர்கள் தீர்மானித்தனராம்.
இவர்களின் நிர்வாண புகைப்படங்கள் 2017 ஆம் ஆண்டுக்கான கலண்டர் ஒன்றில் பயன்படுத்தப்படவுள்ளது.
இக்கலண்டர் விற்பனை மூலம் கிடைக்கும் நிதியில் 10 சதவீதம் “ரை அப் பிளெக் டோக்” எனும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொண்டு நிறுவனம், குயின்ஸ்லாந்தில் தொலைதூர பிரதேசங்களில் மனநிலை பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவி வருகிறது.








