தீபாவளி தமிழரின் பண்டிகையா?

569


theepavali

‘தீப+ஆவளீ ‘ என்பது வட சொல். தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை. இதற்கான மாற்றீடு இல்லாததால் அப்படியே தீபாவளி என்கிறோம் நாம். தீபாவளி என்பதற்கு, தீபங்களின் வரிசை எனப் பொருள்.பாரதத்தின் பாரிய இப் பண்டிகை ஐப்பசி அமாவாசையில் வரும். விளக்கேற்றி இருள் நீக்கி ஒளி தருவது போல்.. உள்ளத்தில் அகங்காரம், ஆணவம், பொறாமை நீங்கக் கொண்டாடுவதாக இது நம்பப்படுகிறது.

விஜயநகர பேரரசின் இந்து சாம்ராஜ்யம் தமிழ் நாட்டிற்கு வந்த பதினைந்தாவது நூற்றாண்டுக்குப் பின்னரே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்பட்டது எனும் பதிவுமிருக்கிறது.ஒப்பீட்டளவில்.. பழந்தமிழரின் அறுவடைத் திருவிழாவாகிய தைப்பொங்கல், மரபு வழிப் பொருளாதாரம் சார்ந்ததாக அமைய.. தீபாவளியோ துணி மணி விளம்பரம் சார்ந்து பெருந்தொழில்களின் பொருளாதார நிகழ்வாகிறது.எமக்குக் கூறப்பட்ட.. நரகாசூரனை கிருஷ்ணன் அழித்த போது சூரன் தான் இறந்த நாளினை மக்கள் கொண்டாட வேண்டும் என கிருஸ்ணனிடம் கேட்ட கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்பானதா எனும் கேள்வி எழுகிறது.


பிராமணியத்துக்கு எதிரான சமண மதத்தின் இருபத்து நான்காம் தீர்த்தங்கரரான மகாவீரர் இறந்த நாளும் இதுவாகும். ஆதலால் சமணர்கள் வரிசையாக தீபமேற்றி கொண்டாடுகிறார்கள் எனும் கருத்துமிருக்கிறது.

ஆனால்.. பிராமணர்களின் எதிர் மதம் சமணம் என்பதால் மகாவீரர் இறந்த நாளை பிராமணர்கள் கொண்டாடியிருக்கலாம். இருப்பினும் ஒப்பீட்டளவில் இந்தியாவில் இந்துக்கள் அதிகம் என்பதால் இது இந்துக்களின் விழாவாக கணிக்கப்படுகிறது.


தமிழ்நாட்டவரிடம் கேட்டால் நரகாசூரனை கிருஷ்ணன் அழித்த கதையைக் கூறுவர். வேறு சிலரோ.. வனவாசம் முடித்து இராமன் அயோத்தி வர மக்கள் தீபமேற்றி கொண்டாடினர் என்பர்.

ஆனால் வால்மீகி இராமாயணத்தில் இவ்விடையம் இருக்கிறதா என்றும்.. அதை தழுவி வந்த இராமாயணங்களில் தீபாவளி பற்றி எவ்விடத்தில் வருகிறதென்றும் கேள்வி எழுப்புகிறார் சென்னையிலிருந்து பத்தியெழுத்தார் இரா. பாணுகுமார் அவர்கள்.

மேலும்.. சக்தியின் இருபத்தோராவது நாளான கேதார கௌரி விரதம் முடிவுற்றதும் சிவபெருமான் சக்தியை பாதியாக ஏற்றுக்கொண்டு ‘ அர்த்த நாதீஸ்வரர் ‘வடிவம் எடுத்தது இந் நாளில் என்றும் ஒரு கதை ‘ஸ்கந்த புராணத்தில்’ இருக்கிறது.

இன்னொரு பண்பையும் அவதானிக்கலாம். தீபாவளிக்கு தமிழ்நாட்டில் எண்ணை தேய்த்துக் குளிப்பர். எண்ணை தேய்ப்பது இறந்தோர் நாளின் சடங்கிலொன்று. அப்படியானால் நரகாசூரன் இறந்ததற்கு இது சாத்தியமாகுமா.. எனும் கேள்வியும் எழுகிறதல்லவா..?


ஆக தீபாவளிக்கான காரணங்களை பல சமயத்தவரும் பலவாறு கூறினாலும்.. விளக்கேற்றலின் மகிமையானது உள்ளத்தில் ஒளியேற்றி மான்புடன் வாழ வேண்டும் என்பதனையே குறிக்கிறது.

– வே.முல்லைத்தீபன்-