ஒரு இனத்தினுடைய வரலாறு அல்லது பண்பாட்டை யாராலும் மாற்றவோ அழிக்க முடியாது : சிவசக்தி ஆனந்தன்!!

244

ananthan

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சாரபேரவையும் வவுனியா மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடாத்திய கலாச்சார நிகழ்வுகள் நேற்று வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

எங்களுடைய பண்பாடு, காலாச்சாரம் இந்த விடயங்கள்
பாதுகாக்கப்பட்டால் மட்டும்தான் நாங்கள் இந்த நாட்டிலே நிரந்தராமாக சமாதானத்தையும் ஒற்றுமையையும் அடைய முடியும். அதே வேளை ஒரு இனத்தினுடைய மொழி, கலாச்சாரம் பண்பாட்டை இன்னுமொரு இனத்தை சேர்ந்தவர்கள் பேணி பாக்காத்து மதிக்கப்படவேண்டிய தேவை இருக்கின்றது.

சிங்கள மக்களுடைய கலை கலாச்சாரத்தை தமிழ் மக்கள் மதிக்க வேண்டும். தமிழ் மக்களுடைய கலை கலாச்சாரத்தை சிங்கள மக்கள் மதிக்க வேண்டும். இதனூடாக தான் நாங்கள் இந்த நாட்டினுடைய நல்ல தீர்வையோ, சாமாதானத்தையோ பெற முடியும்.

இந்த பண்பாட்டு பெருவிழா முக்கியான ஒரு பெருவிழாவாகும். ஒரு இனத்தினுடைய வரலாறு அல்லது பண்பாடு என்பதை யாராலும் மாற்ற முடியாது. அழிக்க முடியாது. அதனை நாங்கள் திரிவுபடுத்தவும் முடியாது. எனவே இவற்றை பேணி பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு மதத்தினரதும் இனத்தினரதும் பாரிய கடமையாக இருக்கின்றது.

அந்தவகையில் நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்திலே எங்களது கிராமங்களில், ஆலயங்களில் வருடம் தோறும் நடைபெறுகின்ற திருவிழாக்களிலே பல்வேறுபட்ட கலைநிகழ்ச்சிகளான வில்லுப்பாட்டு, நாட்டுக்கூத்து, நடனம், நாடகம் போன்ற பல நிகழ்ச்சிகளை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

ஆனால் பல வருடங்களாக அப்படியான கலை நிகழ்ச்சிகளை பார்க்க முடியவில்லை. அதற்கு முக்கியமான காரணம் இந்த நாட்டினுடைய யுத்தம், இடப்பெயர்வு, மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்கள். ஆகவே யுத்தம், இடபெயர்வுகள் மக்களிடையே பாரிய மனஅளுத்தம் ஏற்பட்டிருக்கின்றது.

இப்படிப்பட்ட இந்த இறுக்கமான ஒரு துயரமான சூழலில் இருந்து விடுபெற வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக நாங்கள் ஒவ்வொருவரும் இப்படியான நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். அதனை பாதுகாக்க வேண்டும். அதற்குரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் இந்த கலைஞர்களுக்கான ஊக்குவிப்பு உதவித்திட்டங்களை வழங்க வேண்டும்.

ஏனெனில் ஒரு நாடகத்தையோ ஒரு கூத்தையோ பழக்குவதாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று வாரம் எடுக்கின்றது. ஆகவே அவர்களுக்கான ஒரு ஊக்குவிப்பு தொகையினை அல்லது சிறு உதவி தொகையினை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது.ஆகவே மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் அனைவருமாக சேர்ந்து இந்த மாவட்டத்திலுள்ள கலைஞர்களுக்கு இந்த பண்பாட்டை கலையை எதிகாலத்தில் வளர்க்க வேண்டிய தேவை இருக்கின்றது.

இதனைவிட கிராமபுறங்களில் இலைமறை காய்களாக இருக்கின்ற பல்வேறு துறை சார்ந்தவர்கள் கௌரவிக்கபடாமல் இருக்கின்றார்கள். நாட்டு வைத்தியம், நாடக கலைஞர்கள், மனித நேயத்துக்காக பணியாற்றியவர்கள் போன்ற பல்வேறுபட்டவர்கள் இலைமறைகாய்களாக இருக்கின்றார்கள். அப்படியானவர்களையும் நீங்கள் அழைத்து கௌரவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.