சீனாவைச் சேர்ந்த யுவதியொருவர் இருபது இளைஞர்களை காதலித்து, அவர்களிடம் கைத்தொலைபேசிகளை அன்பளிப்பாக பெற்றதன் மூலம் சொந்தமாக வீடொன்றை வாங்கியுள்ளார்.
ஸியோலி எனும் இந்த யுவதி, இருபது இளைஞர்களை காதலித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தனக்காக ஐபோன் 7 ரக தொலைபேசியை வாங்கித் தருமாறு தனது காதலர்களிடம் ஸியோலி கோரினாராம்.
இத் தொலைபேசிகளை சீன இணையத்தளமொன்றின் ஊடாக அவர் விற்பனை செய்தார். இவ்வாறு 20 காதலர்களிடமும் 20 ஐபோன் 7 தொலைபேசிகளை வாங்கி, அவற்றை மீள் விற்பனை செய்ததன் மூலம் 115,010 சீன யுவான்களை (சுமார் 25 இலட்சம் ரூபா) ஸியோலி திரட்டினார் என ‘பிரவுட் கியாயோபா எனும் பெயரில் செயற்படும் ஒருவர் இணையத்தளமொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த யுவதி தொடர்பான தகவல்கள் சீன சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இவரின் நடவடிக்கை மிக மோசமானது என பலர் விமர்சித்துள்ளனர். ஆனால், மற்றொரு யுவதி கருத்துத் தெரிவிக்கையில், “என்னால் ஒரு காதலரைக் கூட தேடிக்கொள்ள முடியாமல் உள்ளது.
இந்த யுவதி எப்படி இருபது பேரை ஒரே காலத்தில் காதலித்து, அவர்கள் அனைவரிடமும் ஐபோன் தொலைபேசியையும் பெற்றுள்ளார்!” என வியப்புத் தெரிவித்துள்ளார்.