வவுனியாவில் தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற வாள்வெட்டு, மோதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 7 பேரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி வவுனியாவின் பல இடங்களிலும் வாள்வெட்டு, குழுமோதல்கள் இடம்பெற்றதுடன் இதன்போது பலர் காயமடைந்திருந்தனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிசார் மதீனாநகர் பகுதியில் தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் 5 பேரையும், கற்குழி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தொடர்பில் 2 பேரையும் கைதுசெய்து வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
நேற்று புதன்கிழமை இந்த வழக்கை விசாரித்த வவுனியா நீதிமன்றம், குறித்த 7 பேரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விள்க்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






