அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக பிரதமர் வழக்கு தாக்கல் செய்வதை ஏற்க முடியாது : டியூ.குணசேகர!!

353

ranil

மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திரம் சம்பந்தமாக சட்ட நடவடிக்கைக்கு சென்றாலும் அது தொடர்பாக செயற்பாடுகளை முன்னெடுக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ளவர்கள் மீது தனக்கு நம்பிக்கையில்லை என முன்னாள் அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அர்ஜூன் மகேந்திரனை பாதுகாக்கும் பிரதமரே அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த எவரும் இதில் சம்பந்தப்படக் கூடாது. இதனால், ஜனாதிபதி விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்து இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் கோப் அறிக்கை இன்னும் அச்சிடப்படவோ, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ வழங்கப்படவில்லை என டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, பிரதமருக்கு எதிராக முறைப்பாடு செய்ய தயாராக இருந்த போதிலும் இலஞ்ச ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் இதுவரை நேரத்தை ஒதுக்கி தரவில்லை என கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்று ரீட் கட்டளை ஒன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பில் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.