காஷ்மீரில் குண்டு சப்தங்களுக்கு இடையே நடந்து முடிந்த இசை நிகழ்ச்சி!!

511

kashmir

இந்திய பார்சி இனத்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற இசை நிகழ்ச்சியாளர் ஜுபின் மேத்தாவின் இசை நிகழ்ச்சி நேற்று மாலை காஷ்மீரில் நடை பெற்றது.

இந்தியாவின் ஜேர்மன் தூதரகம் இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இசை மூலம் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரை உறுதிப்படுத்த நினைப்பதாகக் கூறி பல பிரிவினைவாத இயக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

தங்களின் எதிர்ப்பைக் காட்டும்வண்ணம் கடையடைப்பு நிகழ்ச்சிக்கும் அந்த இயக்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இசை நிகழ்ச்சி நடந்த ஷாலிமார் பூங்காவினை சுற்றியிருந்த பகுதிகளின் கட்டுப்பாட்டை வியாழன் அன்றே காவல்துறை ஏற்றது.

பல அடுக்குப் பாதுகாப்பு இந்தப் பகுதிக்கு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 2000 ரசிகர்கள் கூடியிருந்து இசை நிகழ்ச்சியினைக் கண்டு களித்த போதிலும், ஆங்காங்கே துப்பாக்கித் தாக்குதல்கள் நடைபெற்றவண்ணம்தான் இருந்தன.

புட்ஷா சதுக்கத்தில் வேகமாகத் தங்களைக் கடந்து சென்ற காரை காவல்துறை வீரர்கள் சுட்டதில் காரை ஓட்டியவரின் இரண்டு கால்களும் சேதமடைந்தன.காஷ்மீரின் தென்பகுதியில் உள்ள புல்வாமா என்ற இடத்தில் அடையாளம் தெரியாத போராளிகள் காவல்துறையினர் மீது கையெறி குண்டுகளை வீசியதில் ஏழு பேர் காயமடைந்தனர்.

தலைநகரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ஷோபியன் மாவட்டத்தில் ராணுவக் காவல் துருப்புகளினால் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உள்ளூர் மக்கள் அவர்கள் அப்பாவி மனிதர்கள் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

ஆயினும் அவர்கள் அங்கிருந்த சோதனைச் சாவடியைத் தாக்கியதாகவும் ஆயுதங்களையும் கையெறி குண்டுகளையும் தங்களுடன் வைத்திருந்ததாகவும் சிஆர்பிஎப்பின் நிர்வாக இயக்குநர் திலிப் திரிவேதி தெரிவித்துள்ளார்.