14 ரயில் பெட்டிகள் தடம் புரள்வு : 63 பேர் பலி!!(படங்கள்)

348

 
இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் அருகே தடம்புரண்டு, கவிழ்ந்த விபத்தில் சுமார் 63 பேர் உயிரிழந்தனர்.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் வழியாக பீகார் மாநில தலைநகர் பாட்னா நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த இந்தூர்-ராஜேந்திரா நகர் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை 3.10 மணியளவில் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்ரயான் என்ற இடத்தில் தண்டவாளத்தைவிட்டு விலகிச்சென்று, தடம்புரண்டது.

இதில், அந்த ரயிலின் 14 பெட்டிகள் ஒன்றின்மீது மற்றொன்று பயங்கரமாக மோதியதால் பெட்டிகளின் உள்ளே தூங்கி கொண்டிருந்த பயணிகள் பீதியால் அலறித் துடித்தனர். குறிப்பாக, இரண்டு ஏ.சி. பெட்டிகள் உள்பட நான்கு பெட்டிகள் மிகவும் சேதமடைந்து உருக்குலைந்துப் போய் கிடக்கின்றன.

இவ்விபத்து பற்றிய தகவல் அறிந்து, விரைந்துவந்த மீட்புக் குழுவினர், நசுங்கிய ரயில் பெட்டிகளில் சிக்கி, உயிருக்கு போராடிய பலரை உயிருடன் மீட்டனர்.

இன்று காலை 8 மணிநிலவரப்படி, ரயில் பெட்டிகளில் உடல் நசுங்கிய நிலையில் கிடந்த 45க்கும் அதிகமான பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், மேலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

காயமடைந்த நூற்றுக்கும் அதிகமான பயணிகள் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பாதுகாப்பாக மீட்கப்பட்ட பயணிகள் பஸ்களின் மூலம் தங்களது பயணத்தை தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தின் குறுக்கே பரவலாக விழுந்து கிடப்பதால், இந்தப்பாதை வழியாக செல்லும் பிற ரயில்களின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், இந்த கோரவிபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரெயில்வேதுறை மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, விரிவான விசாரணை மேற்கொள்ளும்படி ரயில் வேதுறை மந்திரி சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.

1 2 3 4 5