எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் : பாராளுமன்றில் ஸ்ரீநேசன்!!

478

srinesan

சட்டத்தின் முன் யாவரும் சமமானவர்களே, அதனால் அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று(21) நடைபெற்ற வரவுசெலவு திட்டம் தொடர்பான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அண்மைக்காலமாக இலங்கையின் தற்போதைய சட்டத்தையும், அமைதியையும் குழப்பும் வகையில் பலரும் செயற்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், அதற்கு சிறந்த உதாரணமே மட்டக்களப்பில் கடந்த சில காலமாக அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் செயற்பாடு.

தான் தேரர் என்பதை மறந்துவிட்டு மோசமான வார்த்தைப்பிரயோகங்களை அரச பணியாளர்களின் மீது அள்ளி வீசி வருகிறார். ஆனால் சட்டமோ அதனை கண்டும் காணாதது போல் செயற்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் வாழ்ந்த பௌத்த பிக்குமார்கள் புனிதத்தின் அடையாளமாக காணப்பட்டார்கள். ஆனால் இன்று சுமனரத்ன தேரர் அப்புனிதத்திற்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டு வருகிறார்.

மேலும், பௌத்தர்கள் வாழாத சிறுபான்மை இனத்தவர்கள் மட்டுமே வாழ்கின்ற பகுதிகளில் புத்தர் சிலை வைக்கும் திட்டத்தையும் மேற்கொண்டு வருகிறார்.

சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமமானவர்களே. எனவே அவருக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இது இவ்வாறு இருக்க, தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் பாதுகாப்பற்ற வதிவிடத்தில் வாழ்வதோடு, மிகவும் மோசமான நிலையிலுள்ள வாகனமொன்றிலேயே தனது பயணங்களை மேற்கொண்டு வருகின்றார்.

எனவே அவருக்கான உரிய வதிவிடமும், வாகனமும் வழங்கப்படுவதோடு, எதிர்க்கட்சி தலைவரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மற்றும் கடந்த காலத்தில் வகுக்கப்பட்டது போன்ற பக்கச்சார்பான தேசிய கொள்கை வகுக்கப்படாது, நடுநிலையான மற்றும் சிறுபான்மை இனத்தினருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலான தேசிய கொள்கையொன்று கொண்டுவரப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும், சமத்துவம் அடிப்படையில் அனைத்து மதத்தினருக்கும், இனத்தவருக்கும் வழங்கப்பட்டால் தான் நாட்டை கட்டியெழுப்பும் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள்.

கொண்டுவரப்படுகின்ற கொள்கைகள் சரியான முறையில் அமைந்தாலும் கூட, அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

முற்போக்கான சிந்தனையுடனான அரசியல் யாப்பு கொண்டுவரப்பட வேண்டும். இதற்கு மேலதிகமாக அந்த யாப்பில் எதிர்காலத்தில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படக்கூடாது என ஸ்ரீநேசன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.