சில குறிப்பிட்ட புவியியல் பகுதிகளில் வாழும் மக்களின் செய்தியோடைகளில் (நியூஸ் ஃ பீட்) தோன்றும் பதிவுகளை தடுக்க ஒரு சிறப்பு மென்பொருளை சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வருவதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன ஊடக மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் பேஸ்புக் மீண்டும் நுழைய இந்த சிறப்பம்சம் கொண்ட மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் மூன்று முன்னாள் மற்றும் இந்நாள் பணியாளர்களிடம் தான் தகவல்கள் பெற்றதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த மென்பொருளின் இருப்பு குறித்து உறுதி செய்யவோ அல்லது மறுப்பு தெரிவிக்கவோ மறுத்துள்ள இந்த சமூகவலைதள நிறுவனம், சீனா குறித்து புரிந்து கொள்வதற்கும், அறிந்து கொள்வதற்கும் தாங்கள் நேரம் செலவிடுவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தான் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2009-இல் இருந்து சீனாவில் ஒரு மெய்நிகர் தனியார் வலையமைப்பு மற்றும் மென்பொருள் மூலம் தான் பேஸ்புக் வலைதளம் அணுகப்பட்டு வந்தது.
இந்த மென்பொருள், பேஸ்புக் போன்ற இணைய தளங்களை பயன்படுத்துவோர் தங்களின் உண்மையான இருப்பிடத்தை மறைக்கும் வண்ணமாகவும், உள்ளூர் இணையக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க உதவும் வகையிலும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாகும்.
1.8 பில்லியன் தீவிர பயன்பாட்டாளர்களை கொண்ட பேஸ்புக் வலைதளம், தற்போதுள்ள தான் பங்கு வகிக்கும் சந்தைகளைத் தாண்டி உலகெங்கும் உள்ள பல பகுதிகளிலும் நுழைய கடுமையாக முயற்சிகள் எடுத்து வருகிறது.