பரீட்சையின் போது வினாக்களுக்கு விடைகளை எழுதிக் கொண்டிருந்த மாணவர்களின் தலை முடியை ஆசிரியர் ஒருவர் கத்தரித்து அந்த முடிகளை அம் மாணவர்களின் சேர்ட் பைக்குள் திணித்த சம்பவம் பதுளை பிரதேச பாடசாலை ஒன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி பாடசாலையில் ஆண்டு 9க்கான தவணைப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களில் சிலர் தலை முடியை வளர்த்திருந்ததனால் பரீட்சையின் மேற்பார்வை கடமைகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு அவர்களின் தலைமுடியை கத்தரித்து, அவர்களின் மேலாடைப் பைக்குள் திணித்துள்ளார்.
இவ்வாறு ஆசிரியர் நடந்து கொண்டதால் தங்களது மனநிலை பாதிக்கப்பட்டு பரீட்சையில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடைகளை எழுத முடியாமல் போய்விட்டதாக அம் மாணவர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி மாகாண கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, முறைப்பாட்டு எழுத்து மூலமாக, சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட ஆசிரியருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.






