செருப்பு தைக்க 10 ரூபாய்… டிப்ஸ் 90 ரூபாய்..! சில்லறை பிரச்னைக்கு மத்திய அமைச்சரின் யுக்தி! (வீடியோ)

827

c3_15531

கோவை விமான நிலையத்தில் தனது செருப்பு அறுந்ததால், ரோட்டோர செருப்பு தைக்கும் கடையில் செருப்பை தைத்துக்கொண்டார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி. தொழிலாளியிடம் 100 ரூபாயை நீட்டிய மத்திய அமைச்சர், 90 ரூபாயை டிப்ஸாக கொடுத்தார்.

கோவையில் நடைபெறும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, இன்று மதியம் கோவை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் வரும் போது இவரது செருப்பு திடீரென அறுந்தது. இதையடுத்து ஒற்றை செருப்புடன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார் ஸ்மிருதி இராணி.

வழக்கமான செய்தியாளர்களை சந்தித்து பேசும் ஸ்மிருதி இராணி, விமான நிலையத்தில் காத்திருந்த செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டு காரில் ஏறி வெளியேறினார். ஸ்மிருதி இராணி ஒற்றை செருப்புடன் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து ஈஷா யோகா மையம் சென்ற ஸ்மிருதி இராணி, வழியில் செருப்பு தைக்கும் கடை ஒன்றில் நிறுத்தி செருப்பை தைத்துக்கொண்டார். செருப்பு தைக்க தொழிலாளி 10 ரூபாய் கேட்க, தன் உதவியாளரிடம் இருந்து 100 ரூபாயை வாங்கி கொடுத்தார்.  10 ரூபாய் போதும் என தொழிலாளி சொல்ல, ‘கீப் த சேஞ்ச்’ என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.

இதற்கு ‘வேலை செய்யாம காசை வாங்குனா பாவம் பிடிச்சுக்கும். வேணும்னா செருப்ப  முழுக்க திரும்பவும் தைச்சு கொடுக்கறேன். திரும்பவும் அறுந்தறாம இருக்கும்,” எனச்சொல்லி, செருப்பு அறுந்த இடம் மட்டும் அல்லாது செருப்பு முழுக்க தைத்து கொடுத்தார்.  இந்த நிகழ்வின் போது பி.ஜே.பி. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் உடனிருந்தனர்.

இந்த நிகழ்வை, வீடியோ, புகைப்படமாக பதிவு செய்து பி.ஜே.பி. நிர்வாகிகளே பரப்பி வருகிறார்கள். நல்ல கேளுங்க வீடியோவோட 27வது வினாடியில் ‘செருப்பு தைக்கிறவங்களையும் சேர்த்து எடுங்க’னு ஒரு வாய்ஸ் வரும். அது வேற யாருடயதும் இல்லை. வானதி சீனிவாசன் குரல் தான்.

என்னமா ப்ளான் பண்றாங்க…