அமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளில் தப்பிய கஸ்ட்ரோ என்னும் கம்பீரன்!!

376


c

(தி இந்து நாளிதழில் வெளியான ஜி.எஸ்.எஸ். எழுதிய ‘கிடுகிடுத்த கியூபா’ தொடரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் ஒருசில மாற்றங்களுடன் இங்கே.)


கியூப முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ட்ரோ கடந்த வெள்ளிக்கிழமை தனது 90 ஆவது வயதில் காலமானமை உலகின் பல பாகங்களிலுமுள்ள அவரின் அபிமானிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெ­ரிக்­காவின் தெற்கு நுனியில் உள்ள ஃபுளோ­ரிடா மாநி­லத்­தி­லி­ருந்து 140 கிலோ­மீற்றர் தூரத்திலுள்ள தீவு கியூபா. இதன் தலை­நகர் ஹவானா. இரண்­டா­வது பெரிய நகர் சாண்­டி­யாகோ.கியூ­பாவின் அதி­கா­ர­பூர்வ மொழி ஸ்பானிஷ். பல புயல்­களை எதிர்­கொண்ட நாடு (நிஜ­மா­கவும், உரு­வ­க­மா­கவும்). ஸ்பானிய குடி­யேற்ற நாடாக கியூபா இருந்­தது.

அமெ­ரிக்­கா­வுக்கும் ஸ்பெய்­னுக்கும் இடை­யி­லான யுத்­தத்­தை­ய­டுத்து 1898 ஆம் ஆண்டு கியூ­பாவை அமெ­ரிக்­கா­விடம் ஒப்­ப­டைத்­தது ஸ்பெய்ன். அதன்பின் கியூ­பாவில் தனது இரா­ணுவ ஆட்­சியை ஏற்­ப­டுத்­தி­யது அமெ­ரிக்கா.


சில வரு­டங்­களில் கியூ­பா­வா­சிகள் ஸ்பெய்னுக்­காகக் காட்­டிய அதே சிவப்புக் கொடியை அமெ­ரிக்­கா­வுக்கும் காட்­டி­னார்கள். அமெரிக்கா பணிந்­தது. 1902 மே 20 ஆம் திகதி அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து சுதந்­திரம் பெற்­றது கியூபா.

ஆனால் ‘கியூ­பா­வி­லுள்ள குவாண்­ட­னமோ விரி­குடா என்ற இடத்தை அமெ­ரிக்­கா­வுக்கு நிரந்­தரக் குத்­த­கைக்கு விட­வேண்டும். அங்கே அமெ­ரிக்கா தனது கடற்­ப­டையை நிறுத்தி வைக்­கலாம்’ என்­பது போன்ற நிபந்­த­னை­களை விதித்­தது.


அன்­றைய அவ­ச­ரத்­துக்கு கியூபா இதற்கு ஒப்­புக்­கொண்­டது. புல்­ஜென்­சியோ படிஸ்டா என்­பவர் சுதந்­திர கியூ­பாவின் ஜனா­தி­ப­தி­யானார். தான் வைத்­த­து தான் சட்டம் என்று அவர் ஆட்சி நடத்த ஆரம்­பித்தபோது மக்கள் நொந்து நூலாகிப் போனார்கள்.

இதைக் கண்டு குமு­றினார் ஓர் இளம் வழக்­க­றிஞர். குறிப்­பாக வெளி­நாட்டு முத­லீ­டு­களை படிஸ்டா வர­வேற்­ப­தற்கு எதிர்ப்பு காட்­டினார். படிஸ்­டா­வுக்கு எதி­ராகப் புரட்­சியில் ஈடு­பட்டுச் சிறையில் அடைக்­கப்­பட்டார்.

சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யா­ன­வுடன், மெக்­ஸி­கோ­வுக்குச் சென்று திட்­டங்­களைத் தீட்­ டிய அந்த இளம் வழக்­க­றிஞர் பிடல் கஸ்ட்ரோ!. உலகின் மேற்குப் பாதியில் முதன்­மு­தலாக ஒரு கம்­யூ­னிஸ தேசத்தை உரு­வாக்­கி­யவர் அவர்.

1926 ஆகஸ்ட் 13 அன்று பிறந்­தவர். கல்­வியில் அதிக ஆர்வம் கொண்­டவர். முக்­கி­ய­மாக ஸ்பானிஷ் மொழியில் மிகுந்த தேர்ச்சி கொண்­டவர். விவ­சாயம் மற்றும் வர­லாறு ஆகிய பாடங்கள் என்றால் அவ­ருக்கு மிகவும் விருப்பம்.

அர­சி­ய­லிலும் அதிக ஆர்வம். தட­களப் போட்­டி­க­ளிலும் தேர்ச்சி பெற்­ற­வ­ராக இருந்தார். 1945 இல் கியூ­பாவின் தலைநகரிலிருந்த ஹவானா பல்­க­லைக்­க­ழ­கத்தில் சட்டப்படிப்பை படித்தார்.

பிடல் கஸ்ட்ரோவும் ஒரு புரட்சி இயக்­கத்தில் சேர்ந்தார். அதன் பெயர் The Union Insurreccional Revolucionaria. ரஃபேல் ட்ரூஜில்லோ என்­பவர் டொமி­னி கன் குடி­ய­ரசை ஆண்டு வந்தார் (கரீ­பியன் பிராந்­தி­யத்தில் கியூ­பா­வுக்கு அடுத்த பெரிய நாடு இது).

castro

இவ­ரது அரசின் அடக்குமுறையை எதிர்த்து பிர­பல எழுத்­தாளர் ஜுவான் போஷ் என்­பவர் உரு­வாக்­கிய புரட்சிப் படையில் சேர்ந்து கொண்டார் பிடல் கஸ்ட்ரோ.

இதற்­காக அவர் தற்­கா­லி­க­மாக பல்­க­லைக்­க­ழகப் படிப்­பி­லி­ருந்து வில­கினார். ஆனால் டொமி­னிகன் குடி­ய­ரசை நோக்கி கப்­பலில் இந்தப் புரட்சிக் குழு பயணம் செய்து கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென்று ‘இப்­போது செயல்­பாடு வேண்டாம்’ என்ற ஆணை வந்­தது.
அப்­போது பிடல் கஸ்ட்ரோ எதிர்­பா­ராத ஒரு செயலைச் செய்தார். கடலில் குதித்தார். தன் தலை­மீது துப்­பாக்­கியை சுமந்­த­படி வெகு­தூரம் கடந்து கரையை அடைந்தார்.

கம்­யூ­னிஸ ஈர்ப்பு

கொலம்­பி­யாவில் லிபரல் கட்சித் தலைவர் ஜோர்ஜ் கெய்டான் என்­பவர் படு­கொலை செய்­யப்­பட அந்த நாடே பற்றி கல­வ­ரங்­களில் எரியத் தொடங்­கி­யது.

அந்தக் கல­வ­ரங்­களில் முக்­கிய பங்­கெ­டுத்துக் கொண்டார் பிடல் கஸ்ட்ரோ. தெருக்­களில் வீடு ­வீ­டாகச் சென்று அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ரான அறிக்­கை­களை விநி­யோ­கித்தார்.

கொலம்­பிய ஆட்­சி­யா­ளர்கள் கியூப மாண­வர்கள் மீது கடும் நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தற்காக அவர்­களைத் துரத்த, அவர்கள் கொலம்­பி­யாவில் உள்ள கியூபா தூத­ர­கத்தில் சர­ண­டைந்­தனர்.

பிறகு அங்­கி­ருந்து ஹவானா வந்து சேர்ந்த பிடல் கஸ்ட்ரோ தனது சட்டப் படிப்பைத் தொடர்ந்தார். ஆர்­டொ­டாக்ஸோ எனும் கட்­சியில் தன்னை இணைத்துக் கொண்டார் பிடல் கஸ்ட்ரோ.

கியூ­பாவின் தலை­ந­க­ரான ஹவானா பல்­க­லைக்­க­ழ­கத்தில் பட்டப்படிப்பை முடித்த பிடல் கஸ்ட்­ரோ­வுக்கு அர­சி­யலில் ஆர்வம் அப்­போதே கொழுந்து விட்­டெ­ரிந்­தது.

1952இல் அங்கு நடை­பெ­று­வ­தாக இருந்த தேர்­தலில் போட்­டி­யிட முயன்றார். ஆனால் அதற்­குள்­ளாக அரசை இரா­ணுவத் தலைவர் படிஸ்டா கைப்­பற்­றி­யதால் பொதுத் தேர்­தல்கள் இரத்துச் செய்­யப்­பட்­டன.

இதன்விளை­வா­கவோ என்­னவோ ஜன­நா­யகம் என்­பதை ஏற்க மறுத்தார் பிடல் கஸ்ட்ரோ. ஆயுதப் புரட்­சி தான் சரியான வழி என்று தீர்­மா­னித்தார்.

1953 இல் இவரும் இவர் சகோ­தரர் ரவுல் கஸ்ட்­ரோவும் இணைந்து படிஸ்டா அர­சின்­ மீது தாக்­குதல் நடத்­தினர். இத் ­தாக்­குதல் தோல்­வி­ய­டைய பிடல் கஸ்ட்­ரோ­வுக்கு15 வருட சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

பின்னர் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்­டது. 1955 ஆம் ஆண்டு சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யானார். பின்னர் மெக்­ஸி­கோ­வுக்கு தப்பிச் சென்றார் பிடல் கஸ்ட்ரோ.

அங்கு ஆர்­ஜென்டி­னாவைச் சேர்ந்த மார்க்­ஸியத் தலைவர் சே குவா­ராவின் நட்பும், ஆத­ரவும் கிடைத்­தது.

புரட்சி இயக்கம்

‘ஜூலை 26 இயக்கம்’ என்­பது பிடல் கஸ்ட்­ரோவால் உரு­வாக்­கப்பட்­டது. இந்தப் புரட்சி இயக்கம் கியூ­பாவை ஆண்ட சர்­வா­தி­காரி படிஸ்­டாவுக்கு எதி­ரா­னது.

சாண்­டி­யாகோ நகரில் இருந்த அரசின் இரா­ணுவப் பகு­தி­யின்­ மீது இந்த அமைப்பு தன் முதல் தாக்­கு­தலை நடத்­தி­யது ஜூலை 26, 1953 ஆம் திகதி. அதனால் இந்தப் பெயர் அதற்குக் கிடைத்­தது. ஆனால், இந்தத் தாக்­குதல் வெற்­றி­க­ர­மா­ன­தாக இல்லை என்­பது வேறு விஷயம்.

பட­கு­களின் மூல­மாக 1956 டிசம்பர் 2 அன்று இந்த இயக்­கத்­தினர் கியூ­பாவை அடைந்­தனர். இந்த இயக்­கத்தைச் சேர்ந்த 82 பேர். பட்­டப்­ப­கலில் இவர்கள் வந்து இறங்­கி­யதால், கியூ­பாவின் விமா­னப்­படை இவர்­களின் மீது தாக்­குதல் நடத்­தி­யது. தவிர இந்த அணி­யினர் இரண்­டாகப் பிரிந்­து­விட்­டனர்.

புரட்சி இயக்­கத்தைச் சேர்ந்த 82 பேரில் 12 பேர் மட்­டுமே உயிர் தப்­பினர். சியெரா மாஸ் ட்ரா என்­பது கியூ­பாவின் எல்லைப் பகு­தியில் அடர்ந்த காடுகள் அமைந்த மலைத் தொடர்.

இதைத் தான் தங்­க­ளது முக்­கிய கள­மாகத் தேர்ந்­தெ­டுத்­தனர் பிடல் கஸ்ட்­ரோ வும், அவ­ரது புரட்சி இயக்­கத்தைச் சேர்ந்­த­வர்­களும். இந்த மலைப் பகு­தியில் மறைந்­த­ப­டி தான் படிஸ்­டாவின் இரா­ணுவ வீரர்கள் மீது சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்குத் தொடர்ந்து கெரில்லாத் தாக்­கு­தல்­களை நடத்­தி­னார்கள்.

பிடல் கஸ்ட்­ரோவின் இயக்­கத்தில் அன்­டோ­னியோ, ஃபிராங் பயஸ் ஆகி­யோரும் அந்தப் புரட்சிக் குழுவின் அபி­மா­னத்தைப் பெற்ற தலை­வர்­க­ளாக இருந்­தனர்.

ஆனால் நடந்த தொடர் தாக்­கு­தல்­களில் அவர்கள் இரு­வரும் கொலை செய்­யப்­பட்­டு­விட, இயக்கத்தின் போட்­டி­யற்ற தலை­வ­ரானார் பிடல் கஸ்ட்ரோ.

நியூயோர்க் டைம்ஸ் இதழில் பிடல் காஸ்ட்­ரோவின் நேர்­காணல் வெளி­யா­னதும் அவ­ரது புகழ் மிகவும் பர­வி­யது. 1958இல் பிடல் கஸ்ட்­ரோவின் இயக்கம் மேலும் வலிமை பெற்­றது.

வேறு­வ­ழி­யின்றி இரா­ணுவம் பின்­வாங்­கி­யது. மருத்­து­வமனை, தொழிற்­சாலை, பள்ளி, சுரங்கம் என்று ஒவ்­வொன்­றாக புரட்சி இயக்­கத்தின் கைவ­ச­மா­கின. இரா­ணு­வத்­தினர் இதனால் மனச்­ சோர்வு அடைய, கஸ்ட்ரோ புது உற்­சாகம் பெற்றார்.

கியூபா நாட்டு இரா­ணு­வத்தைச் சேர்ந்­த­வர்­க­ளி­லேயே கணி­ச­மா­ன­வர்கள் பிடல் கஸ்ட்­ரோவின் இயக்­கத்தில் தங்­களை இணைத்துக் கொண்­டனர். மக்­களின் ஆத­ரவை இழந்த படிஸ்­டாவை இனி ஆத­ரிக்க வேண்டாம் என்ற முடி­வுக்கு அமெ­ரிக்கா வந்து விட்­டது.

என்­றாலும் பிடல் கஸ்ட்­ரோவை அது ஆத­ரிக்கத் தயா­ராக இல்லை. தனது பிர­தி­நிதி கான்­டில்லோ என்­ப­வரைத் தேர்ந்­தெ­டுத்­தது. கான்­டில்லோ, பிடல் கஸ்ட்­ரோ­ வோடு ஒரு இர­க­சிய சமா­தான உடன்­ப­டிக்­கைக்கு வந்தார். (அப்­போதே அவர் தந்­தி­ர­மாகச் செயல் ­பட்டார் என்­ப­து தான் உண்மை).

‘ஆட்­சிக்கு எதி­ரான செயல்­களை பிடல் கஸ்ட்ரோ அணி மேற்­கொள்ளக் கூடாது. அமை­தி­யான முறையில் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்­கலாம். படிஸ்டா நிச்­சயம் கைது செய்­யப்­பட்டு இரா­ணுவ நீதி­மன்­றத்தின் முன்னால் போர்க் குற்­ற­வா­ளி­யாக நிறுத்­தப்­ப­டுவார்’.

இது கான்­டில்லோ அளித்த வாக்­கு­றுதி. ஆனால் நடந்­ததோ வேறு. படிஸ்­டா­வு க்கு இரக­சியத் தகவல் பறந்­தது. அவர் சத்­த­மில்­லாமல் தலைமறை­வானார் கஜா­னாவில் இருந்த கோடிக்­க­ணக்­கான டொலர்­க­ளோடு ஸ்பெய்­னுக்குச் சென்றார் என்­கி­றார்கள்.

கான்­டில்­லோவின் செயல்­பா­டுகள் இத்­துடன் நின்­று­வி­ட­வில்லை. நாட்டின் உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­யான கார்லோஸ் என்­ப­வரை அதி­ப­ராக்­கினார். புதிய அரசு ஒன்­றையும் அமைக்கும் முயற்­சியில் ஈடு­பட்டார்.

பிடல் கஸ்ட்ரோ கடும் கோபமடைந்தார். அவ­ரது படை ஹவா­னா­வுக்குள் நுழைந்து கான்­டில்­லோவைக் கைது செய்­தது. இதற்கு இரா­ணு­வத்­தி­லேயே இருந்த பிடல் கஸ்ட்ரோ அனு­தா­பிகள் உத­வி­னார்கள்.

சேகுவேராவுடன்…

1959 ஆம் ஆண்டின் தொடக்­கத்தில் படிஸ்­டாவின் அரசு முழு­வ­து­மாக நீக்­கப்­பட்­டது. 1959 பெப்­ர­வரி 16 ஆம் திகதி கியூ­பாவின் 16 ஆவது பிர­த­ம­ரானார் பிடல் கஸ்ட்ரோ.

தற்­கா­லிக அதி­ப­ராக மேனுவல் உரு­ஷியா என்­ப­வரை நிய­மித்தார். பிடல் கஸ்ட்­ரோவின் பரம சீடர் என்றே இவரைக் கூறலாம். நாட்டில் ஊழல் குறைந்­தது.

கல்வி அறிவு மேம்­பட்­டது. பிற அர­சியல் கட்­சிகள் மீது தற்­காலித் தடை விதிக்­கப்­பட்­டது. ‘நாட்டை சோஷ­லிசப் பாதையில் திருப்ப முயற்சித்தார். புரட்­சியை அடக்கும் நோக்­கத்தில் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­களை படிஸ்டா அரசு கொன்று குவித்­தி­ருந்­தது.

இதற்குக் கார­ண­மா­ன­வர்களை கஸ்ட்ரோ தண்­டிக்கத் தொடங்­கினார். வழக்­குகள் நடை­பெற்­றன. அவர்­க­ளுக்கு தூக்குத் தண்­டனை வழங்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டன.

உள்­ளூரில் இதற்கு பலத்த ஆத­ரவு. ஆனால் அமெ­ரிக்க ஊட­கங்கள் இந்த வழி­
மு­றையை ஏற்­க­வில்லை. கியூ­பாவின் பிர­த­ம­ராக கஸ்ட்ரோ பதவி யேற்ற இரு மாதங்­களில் 1959 ஏப்ரலில் அமெ­ரிக்­கா­வுக்கு அவர் விஜயம் மேற்­கொண்டார்.

இரா­ணு­வ­ வீரர் அணி­வதைப் போன்ற ஓர் உடை, இடது கையில் ஒரு புத்­தகம், சுற்­றிலும் பாது­காப்பு வீரர்கள் – இப்­படி பிடல் கஸ்ட்ரோ விமா­னத்­திலிருந்து இறங்­கி­ய­வு­ட­னேயே பொது­மக்­களும், பத்­தி­ரி­கை­யா­ளர்­களும் அவரைச் சூழ்ந்து கொண்­டனர்.

‘உங்­களை மொஸ்­கோவின் ஏஜன்ட்­டாக நாங்கள் எண்­ண­வில்லை. ஆனால் உங்­க­ளுக்கு எதி­ராகச் செயல்­ப­டு­ப­வர்­களை சர­மா­ரி­யாகக் கொல்­கி­றீர்­களே இதை எப்­படி ஏற்க முடியும்?’ என்று கேட்டார் ஒரு பத்­தி­ரி­கை­யாளர்.

தாங்கள் தண்­டிப்­பதும் கொல்­வதும் கொலை­கா­ரர்­க­ளைத் தான் என்றும் அவர்கள் தனக்­கெ­தி­ராக மட்­டு­மல்ல, நாட்­டுக்கு எதி­ராகவும் செயற்­பட்­ட­வர்கள் என்றும் கூறினார் பிடல் கஸ்ட்ரோ.

‘கியூ­பாவில் உள்ள சீனித் தொழிற்­சா­லை­களை தேசி­யமய­மாக்கி விடு­வீர்­களா? அங்­குள்ள அமெ­ரிக்­காவின் மூல­த­னத்தை முடக்கி விடு­வீர்­களா?’ என்று பறந்­தது மற்­றொரு கேள்வி.

பதில் சாமர்த்­தி­ய­மாக வந்­தது. ‘நீங்கள் நினைப்­பது போன்ற கம்­யூனிஸ்ட் அல்ல நான். அமெ­ரிக்­காவும், கியூ­பாவும் எதி­ரி­க­ளு­மல்ல’ என்று கஸ்ட்ரோ கூற, மகிழ் ந்து போனது அமெ­ரிக்கா.

ஆனால் விரை­வி­லேயே இந்த உறவு முழு­வதும் முறிந்து விழு­வது போல் சம்­ப­வங்கள் நடந்­தன. மார்க்­ஸிய, லெனின் பின்­பற்­றிய அர­சியல் மற்றும் பொரு­ளா­தார செயல் முறையைத் தான் தாங்­களும் பின்­பற்றப் போவ­தாக கஸ் ட்ரோ 1961 ஆம் ஆண்டு அறி­விக்க, அதி­ருப்­தி­யா­ளர்கள் உரு­வா­யினர்.

அமெ­ரிக்­காவும் இந்த இயக்­கத்­துக்கு எதிர்­நிலையை எடுத்­தது. கோபத்தின் உச்­சிக்கே போன அமெ­ரிக்கா.

கியூ­பாவில் இருந்த அமெ­ரிக்­கர்­க­ளுக்குச் சொந்­த­மான கரும்பு வயல்­களை கஸ்ட்ரோ தேசி­ய­ம­ய­மாக்­கி­ய­தில் தான் முதல் பெரிய பிளவு தொடங்­கி­யது.

கஸ்ட்­ரோவின் இது­போன்ற கம்­யூ­னிஸ நடி­வ­டிக்­கை­களை எதிர்த்துக் கணி­ச­மா­ன­வர்கள் கியூ­பாவை விட்டு வெளி­யே­றி­னார்கள். 1961 ஏப்­ரலில் அமெ­ரிக்க உளவுத் துறை­யான சி.ஐ.ஏ.வினால் பயிற்சி கொடுக்­கப்­பட்­ட­வர்கள் கியூ­பாவைத் தாக்­கி­னார்கள்.

பிடல் கஸ்ட்­ரோவின் ஆட்­சியை அகற்­று­வ­து தான் இதன் நோக்கம். கியூ­பாவின் பே ஒவ் பிக்ஸ் (பன்­றி­களின் குடா) எனும் இடத்தில் இவர்கள் தரை­யி­றங்­கினர்.

ஆனால் மூன்றே நாட்­களில் கியூபா இரா­ணுவம் இவர்­களை அடக்கி விட்­டது. இந்த அடக்­கு­மு­றைக்கு கியூ­பாவின் அப்­போ­தைய பிர­த­ம­ரான பிடல் கஸ்ட்ரோ நேரடிப் பொறுப்­பேற்றார்.

அமெ­ரிக்­கா­வுக்கும் கியூ­பா­வுக்­கு­மான விரோதம் அதி­க­மா­னது. கஸ்ட்­ரோவின் அரசு, அமெ­ரிக்­கர்­க­ளுக்குச் சொந்­த­மான – எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்­க­ளையும் தன்வசம் எடுத்துக் கொண்­டது.

கோப­ம­டைந்த அமெ­ரிக்கா, கியூ­பா­வி­லி­ருந்து சீனி இறக்­கு­மதி செய்­வதை நிறுத்திக் கொண்­டது. உடனே, கியூ­பா­விலுள்ள அத்­தனை வியா­பா­ரங்­க­ளையும் அரசே சுவீகரித்துக் கொள்ளும் என்று அறி­வித்தார் கஸ்ட்ரோ.

கியூ­பா­வு­ட­னான தனது தூத­ரகத் தொடர்­பு­களை அறுத்துக் கொண்­டது அமெ­ரிக்கா. 1976 டிசம்பர் 2 ஆம் திகதி கியூபாவின் ஜனா­தி­ப­தி­யாக பிடல் கஸ்ட்ரோ பதவி­யேற்றார்.

சீனி ஏற்­று­மதி மூலம் கிடைத்த பெரும் நிதியை தனது நாட்டின் கல்வி, இரா­ணுவம் மற்றும் உடல் ஆரோக்­கியத் துறை­க­ளுக்குச் செல­வ­ழித்­தது கியூபா.

இதன்கார­ண­மாக உலகின் தலை­சி­றந்த சில பாட­சா­லைகளும், மருத்­து­வ­ம­னை­களும் கியூ­பாவில் உருவாயின. தனது நெருங்கிய நண்பனான சோவியத் யூனியனிடம் மற்­றொரு உத­வி­யையும் 1962 ஆம் ஆண்டு கேட்டுப் பெற்­றது கியூபா.

அது தான் மிக சக்­தி ­வாய்ந்த ஏவுகணைகள். அமெ­ரிக்கா நடுங்­கி­விட்­டது. ‘உட­ன­டி­யாக கியூ­பா­வி­ட­மி­ருந்து ஏவு­க­ணை­களை சோவியத் யூனியன் திரும்பப் பெறா­விட்டால், போர் தான்’ என்­றது அமெ­ரிக்கா.

சோவியத் மௌனம் காக்க, சில நாட்கள் உல­கமே பதற்ற நிலையில் ஆழ்ந்­தது, வல்­ல­ர­சு­க­ளுக்­கி­டையே அணு ஆயுதப் போர் நடந்­து­விடுமோ என்ற அச்சம் ஏற்­பட்­டது.

கடை­சியில், சோவியத் தனது ஏவு­க­ணை­களைக் கியூ­பா­வி­ட­மி­ருந்து திரும்பப் பெற்­றது. என்­றாலும், பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தனது இரா­ணுவ வீரர்­களை கியூ­பா­வி­லேயே தங்க வைத்­தது.

ஆனால், கியூ­பாவில் பல உரி­மைகள் பறிக்­கப்­பட்­டன. அரசைப் பற்­றியோ, பிடல் கஸ்ட்ரோ குறித்தோ பொது இடங்­களில் விமர்­சனம் செய்தால் கைதும், தண்­ட­னையும் நிச்­சயம் உண்டு என்ற நிலை இருந்­தது.

தங்கள் பேச்­சு­ரிமை பறிக்­கப்­ப­டுவதை விரும்­பாத பலரும் அமெ­ரிக்­கா­வுக்குச் சென்றார்கள். இதற்­கி­டை­யே தான் சோவியத் யூனியன் உடைந்­தது. ஏழை நாடா­கி­யது கியூபா

சோவியத் யூனி­ய­னுக்­கான ஏற்­று­மதி மூலம் கிடைத்த நிதி ஏறத்­தாள நின்­று­விட்ட நிலைக்கு கியூபா தள்­ளப்­பட்­ட­போது அமெ­ரிக்கா சமயம் பார்த்து தனது பொரு­ளா­தாரத் தடை­களை இறுக்­கி­யது.

கஸ்ட்ரோ பதவி இறங்­கி­னால் தான் தடை­களை நீக்கிக் கொள்வோம் என்று வெளிப்­ப­டை­யா­கவே அறி­வித்­தது அமெ­ரிக்கா. 1990களில் கியூபா மிக ஏழ்­மை­யான நாடா­கி­யது.

அதன்பின் கியூ­பாவின் பொரு­ளா­தாரம் மெல்ல மெல்ல மேலும் வீழ்ச்சி கண்­டது. ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் கடல்­வ­ழி­யாக அமெ­ரிக்­கா­வுக்குப் பிழைப்பைத் தேடி ஓடத் தொடங்­கினர்.

வளைந்து கொடுக்கத் தொடங்­கிய கஸ்ட்ரோ

பிடல் கஸ்ட்ரோ நாட்டின் நிலை­மையைப் புரிந்து கொண்டு தான் அதுவரை நினைத்­துக்­கூடப் பார்த்­தி­ராத பல விஷயங்களில் வளைந்து கொடுக்கத் தொடங்­கினார்.

ஸ்பெய்னைச் சேர்ந்­த­வர்கள் கியூ­பாவில் ஹோட்­டல் கள் நிர்­மா­ணிக்க அனு­மதியளித்தார். கனடா மற்றும் ஐரோப்­பிய நிறு­வ­னங்­க­ளுக்குச் சில கனி­மங்­களை எடுத்துக் கொள்ள அனு­ம­தித்தார்.

ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெ­ரிக்கா ஆகி­ய­வற்­றுடன் வணி­கத்தில் ஈடு­பட்டார். முதல் முறை­யாக அங்கு வரு­மான ­வரி அறி­மு­க­மா­னது. 2006 ஆம் ஆண்டு பிடல் கஸ்ட்­ரோ­வுக்கு சத்­தி­ர­சி­கிச்சை நடை­பெற்­றது.

இதைச் செய்து கொள்­வ­தற்கு முன் தனது ஜனா­தி­பதி பத­வியை இராஜி­னாமா செய்து அந்தக் கட­மை­களை இளைய சகோ­தரர் ரவுல் கஸ்ட்­ரோ­விடம் ஒப்­ப­டைத்தார்.

பத­வியில் இல்­லா­விட்­டாலும் பல அர­சியல் முடி­வு­களை கஸ்ட்ரோ எடுத்தார். அவர் விரல் அசை­வில் தான் கியூபா அரசு என்ற நிலை தொடர்ந்­தது. 2008 ஆம் ஆண்டு கியூ­பாவின் ஜனா­தி­ப­தி­யாக ரவுல் கஸ்ட்ரோ பத­வி­யேற்றார்.

‘கஸ்ட்­ரோவைக் கொல்ல 638 முயற்­சிகள்’

கஸ்ட்­ரோவை கொல்ல அமெ­ரிக்கா மேற்­கொண்ட முயற்­சி­களின் எண்­ணிக்கை 600 இற்கும் அதிகம் என்­கிறது கஸ்ட்ரோ தரப்பு. அமெ­ரிக்கா மறுத்­தது. விஷயம் சூடு பிடிக்­கவே அமெ­ரிக்க நாடா­ளு­மன்றம் இதற்­காக ஒரு குழுவை நிய­மித்­தது.

பிராங்க் சர்ச் என்­ப வர் இந்தக் குழுவின் தலைவர் என்­பதால், இந்தக் குழு சர்ச் குழு என்றே அழைக்­கப்­பட் ­டது. 1960லிருந்து 1965 வரை கஸ்ட்­ரோவை தீர்த்துக் கட்ட அமெ­ரிக்க உள­வுத்­துறை எட்டு முயற்­சி­களைச் செய்­தது என்று அறி­வித்­தது சர்ச் குழு.

இதுவே பேர­திர்ச்­சியை உண்­டாக்­கி­யது. கஸ்ட்­ரோவை பாது­காக்க நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த சிறப்பு அதி­கா­ரி­யான ஃபேபியன் எஸ்­க­லண்டே என்­பவர் அமெ­ரிக்க உள­வுத்­துறை, கஸ்ட்­ரோவை கொலை செய்ய 638 முறை முயன்­றது என்றார்.

கியூப அரசைக் கவிழ்க்க திட்­ட­மிட்ட இந்தக் கொலை முயற்­சி­க­ளுக்கு ‘ஒப்­ப­ரேஷன் மங்கூஸ்’ என்றும் பெய­ரி­டப்­பட்­டி­ருந்­ததாம். கொலை முயற்சி என்றால் துப்­பாக்­கி, கத்­தி மாத்திரம் இல்லை. கஸ்ட்ரோ பயன்­ப­டுத்­திய சுருட்டில் விஷம் கலந்­தது ஒரு­வகை. அவர் ஸ்கூபா டைவிங் எனப்­படும் விளை­யாட்டில் ஈடு­படும் பழக்கம் கொண்­டவர்.

இதற்­கான அவர் உடையில் விஷக்­கி­ரு­மிகள் நிரப்­பப்­பட்­டன. அவ­ரது பொல்­பொயின்ட் பேனா வில் விஷம் நிரம்­பிய ஒரு ஊசி இணைக்­கப்­பட்­டது. அதனை அவர் பயன்­ப­டுத்­தும்­போது கிட்­டத்­தட்ட வலியே இல்­லாமல் இந்த ஊசி அவர் விரலைக் குத்த, விஷம் உடலில் கலந்து விடும்.

ஒரு­கட்­டத்தில் அருங்­காட்­சி­யகம் ஒன்­றுக்கு அவர் செல்­லும்­போது அவர் காருக்கு வெடி வைக்கும் திட்­டமும் தொடங்­கப்­பட்­டது. பலத்த பாது­காப்பு எச்­ச­ரிக்­கைகள் கார­ண­மாக இவை­யெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு, கஸ்ட்ரோவின் உயிர் காப்பாற்றப்பட்டது.

அடுத்ததாக அமெரிக்க உளவுத் துறை தன் கைக்குள் போட்டுக் கொண்டது மரிடா லொரென்ஸ் என்பவரை அவர் கஸ்ட் ரோவின் (முன்னாள்) காதலி!. பிடல் கஸ்ட்ரோவின் முன்னாள் காதலி மரிடா லோரென்ஸ் என்பவரையும் தன் வலையில் விழவைத்தது அமெரிக்க உளவுத் துறை.

குளிர்காலத்துக்கான கிறீமை உடலில் தடவிக் கொள்வது கஸ்ட்ரோவின் வழக்கம். அதில் விஷ மருந்தைக் கலந்து அதை கஸ்ட் ரோவின் அறைக்குள் வைத்தார் மரிடா.

ஆனால் இந்தத் திட்டம் கசிந்துவிட, கஸ்ட்ரோ மரிடாவை அழைத்து அவர் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்து ‘இப்படியெல்லாம் செய்வதைவிட நீ என்னை நேரடியாகக் கொன்றுவிடு’ என்று கூற, மரிடா உடைந்து அழுதாராம்.

இந்தக் கொலை முயற்சிகளெல்லாம் ‘கஸ்ட்ரோவைக் கொல்ல 638 முயற்சிகள்’ என்ற பெயரில் சனல் 1 என்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் தொடராக வெளியிடப்பட்டது.

2015 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மீள ஆரம்பித்தார்.

1928 ஆம் ஆண்டின் பின்னர் அந்நாட்டுக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியானார் பராக் ஒபாமா. எனினும் பிடல் கஸ்ட்ரோவை அவர் சந்திக் கவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் தொலைக்காட்சியில் மக்கள் முன் தோன்றிய பிடல் கஸ்ட்ரோ ஆற்றிய உரையில், ‘இதுவே என் கடைசி உரையாகக் கூட இருக்கலாம்.

நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்.

நான் விரைவில் 90 வயதை தொட்டு விடுவேன். காலம் என்னை மறையச் செய்யும். ஆனால், கியூபாவின் கம்யூனிஸ்டுகள் இந்தப் புவியில் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்வர்’ என்றார்.

பிடல் கஸ்ட்ரோவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(மூலம்: தி இந்து)

பிரபலங்களுடன் பிடல் கஸ்ட்ரோ