45 முஸ்லிம்கள் மாவீரர்களாகியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு மட்டக்களப்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற போது, அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“தமிழ் மக்கள் மாத்திரமல்ல. சில முஸ்லிம்களும் மாவீரர்களாகியிருக்கின்றார்கள். 45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்.
ஆகவே, தமிழ் பேசும் மக்கள் மாவீரர்களாக இருந்து இந்த மண்ணின் விடுதலைக்காக தியாகத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பிரகாரம் ஒருவர் மரணித்த பின் அவருக்கு அஞசலி செலுத்த முடியும். ஆனால் மாவீரர்களுக்கு கட்டாயம் அஞ்சலி செலுத்த வேண்டும். தமிழ் மக்களுக்காக தமது உயிரை துச்சமாக நினைத்து அவர்கள் போராடியவர்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது நமது கடமையாகும்” என்றார்.






