17 வயதான பாடசாலை மாணவர் ஒருவரை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக கூறப்ப டும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நபரொருவரினால் நுகேகொடை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குருணாகல் பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் 17 வயதான மாணவர் ஒருவருக்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் பணியாற்றிவரும் நபரொருவரினால் குறுந்தகவல் மற்றும் தொலைபேசி அழைப்புகளின் மூலம் பாலியல் தொல்லை கொடுத்தமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக நுகேகொடை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடத்தப்பட்ட விவாத போட்டியொன்றில் மேற்குறிப்பிட்ட மாணவன் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தபோது சந்தேக நபர் அவர்களது தொலைபேசி இலக்கங்களை பெற்றுள்ளார்.
அதன்பின்னர் அவர் குறித்த மாணவனுக்கு தொடர்ந்தும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் பாலியல் தொடர்பான குறுந்தகவல் அனுப்பியும் தொல்லைகளைச் செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நபரினால் குறித்த மாணவனுக்கு கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 160க்கும் அதிகமான குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளமை மற்றும் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
பொலிஸார் முன்வைத்த சான்றுகளை கருத்தில் கொண்ட நுகேகொடை நீதிவான் மன்றின் பிரதம நீதிவான், அம் மாணவனின் கைத்தொலைபேசியை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணினி தொழில்நுட்ப பிரிவுக்கு அனுப்பிவைத்து அதன் அறிக்கையினை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.






