அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர், தனது உடலை கத்தியால் கீறி தனது இரத்தத்தை காதலன் சுவை பார்ப்பதற்கு அனுமதித்த பின்னர், வாக்குவாதம் ஒன்றையடுத்து காதலனை குத்தி படுகாயப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிசோரி மாநிலத்தின் ஸ்பிரிங்பீல்ட் நகரைச் சேர்ந்த விக்டோரியா வனாட்டர், எனும் இந்த யுவதியும் அவரின் காதலனும் இரத்தம் உறிஞ்சும் வாம்பயர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தனராம்.
அதன்பின் தனது உடலை கத்தியால் கீறி, தனது இரத்தத்தை காதலன் சுவைத்துப் பார்ப்பதற்கும் விக்டோரியா அனுமதித்தார் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும், பின்னர் விக்டோரியாவுக்கும் மதுபோதையிலிருந்து அவரின் காதலனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது, ஆத்திரமடைந்த விக்டோரியா வனாட்டர், தனது காதலனை கத்தியால் குத்தினார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில், விக்டோரியாவின் காதலனுக்கு முதுகில் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, அவசர சேவைப் பிரிவினரால் மேற்படி இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
விக்டோரியாவை பொலிஸார் கைது செய்தனர். அவரை 150,000 டொலர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் உள்ளார்.






