கொலம்பியா விமான விபத்தின் மர்மம் விலகியது : வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

453

f1

கொலம்பியா நாட்டில் விமானம் விபத்துக்குள்ளாகி 71 பேர் பலியான சம்பவத்திற்கு தொடர்பான பின்னணி மர்மங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் நடைபெற இருந்த கால்பந்து விளையாட்டில் பங்கேற்க பிரேசில் நாட்டின் Chapecoense கிளப் வீரர்கள் கடந்த நவம்பர் 28-ம் திகதி LaMia Flight 2933 என்ற விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

இந்த விமானத்தில் 22 கால்பந்து விளையாட்டு வீரர்கள், 21 செய்தியாளர்கள், விமான குழுவினர் உள்ளிட்ட 71 பேர் பயணம் செய்துள்ளனர்.

பொலிவியா நாட்டில் உள்ள Santa Cruz என்ற விமான நிலையத்தில் இருந்து கொலம்பியாவில் உள்ள Medellin விமான நிலையத்திற்கு அந்த விமானம் புறப்பட்டுள்ளது.

ஆனால், துரதிஷ்டவசமாக நிகழ்ந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 71 பேர் பரிதாபமாக பலியாயினர்.

இவ்விபத்தில் 3 விளையாட்டு வீரர்கள், 2 விமானக் குழுவினர் மற்றும் ஒரு செய்தியாளர் என 6 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர்.

விமான விபத்திற்கான விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பல மர்மங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விபத்து நிகழ்வதற்கு ‘மனித தவறு’ தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இவற்றை சற்று விரிவாக பார்ப்போம்.

தவறு 1

விபத்தில் சிக்கிய சிறிய நிறுவனத்தை சேர்ந்த LaMia Flight 2933 என்ற விமானத்தின் சேவைகள் கடந்த 2009-ம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. எனினும், விமானத்தின் தரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளிலும் விமானம் நிறுவனம் சிக்கியது.

கொலம்பியாவில் நடைப்பெற இருந்த முக்கிய விளையாட்டு போட்டியில் இந்த விமானத்தை ஏன் விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்தனர் என்பது தற்போது கேள்வியாக எழுந்துள்ளது.

சர்வதேச பெரிய விமானத்தை வாடகைக்கு எடுத்திருந்தால் அதற்கு 1,00,000 டொலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், அதை விட குறைந்தளவு 60,000 டொலர் கட்டணம் விதித்த LaMia Flight 2933 விமானத்தை தெரிவு செய்துள்ளனர்.

தவறு 2

பொதுவாக, நாடு விட்டு நாடு செல்லும் சர்வதேச விமானங்கள் புறப்படுவதற்கு முன்னதாக அதில் தேவையான எரிபொருள் உள்ளதா என்பது தவறாமல் பரிசோதிக்க வேண்டும்.

இதுமட்டுமில்லாமல், பயணம் செய்யவுள்ள தூரத்தை விட 30 நிமிடங்கள் விமானம் கூடுதலாக பறக்க தேவையான எரிபொருள் விமானத்தில் நிரப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த விமானம் புறப்பட்டபோது எரிபொருளை விமானக்குழுவினர் பரிசோதனை செய்யவில்லை எனத் தெரிகிறது.

ஏனெனில், LaMia Flight 2933 விமானத்தில் முழுவதுமாக எரிபொருளை நிரப்பி விட்டால் அது 2,965 கி.மீ வரை பயணம் மேற்கொள்ளலாம். ஆனால், விமானம் புறப்பட்ட Santa Cruz விமான நிலையத்தில் இருந்து சேரவேண்டிய Medellin விமான நிலையத்திற்கு இடையில் உள்ள தூரம் 1,961 கி.மீ. அதாவது, பயணிக்க வேண்டிய தூரம் குறைவாக உள்ளதால் விமானத்தில் உள்ள எரிபொருளை பரிசோதிக்க வில்லை எனக் கூறப்படுகிறது.

தவறு 3

விமானத்தில் எரிபொருள் பரிசோதனை செய்யவில்லை எனக் கூறப்பட்டாலும், இரண்டு விமான நிலையங்களுக்கு இடையில் உள்ள Cobija என்ற விமான நிலையத்தில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பலாம் என விமானி முடிவு செய்துள்ளார்.

ஆனால், திட்டமிட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக தான் விமானம் புறப்பட்டுள்ளது.

இதனால் இடையில் தரையிறங்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு நேராக Medellin விமான நிலையத்திற்கு விமானம் பறந்துள்ளது.

அதேசமயம், விமானம் இரவு நேரத்தில் புறப்பட்டதால் Cobija விமான நிலையம் மூடப்படும் என்பதாலும் அங்கு தரையிறங்கி எரிபொருளை நிரப்பாமல் விமானம் நேராக பறந்துள்ளது.

தவறு 4

விமானம் வானத்தில் பறந்துக்கொண்டு இருந்தபோது ‘விமானத்தில் போதுமான எரிபொருள் உள்ளதா?’ என விமானியான Miguel Quiroga என்பவருடன் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

இதற்கு ‘விமானத்தில் தேவையான எரிபொருள் உள்ளது’ என விமானி கூறியுள்ளார். இங்கு ஒரு முக்கியமான விடயத்தையும் கவனிக்க வேண்டும்.

இந்த விமானத்தை இயக்கிய Miguel Quiroga விமானி இந்நிறுவனத்தின் முதலாளிகளில் ஒருவர் ஆவார்.

எனவே, தனது சொந்த விமானத்தை பற்றி தனக்கு நன்றாக தெரியும் என்ற நம்பிக்கையில் அவர் ‘விமானத்தில் தேவையான எரிபொருள் உள்ளதாக’ கூறியதாக தெரிகிறது.

தவறு 5

இதுபோன்ற ஒரு சூழலில் தரையிறங்க வேண்டிய Medellin விமான நிலையத்தில் இருந்து 5 மைல்கள் தொலைவில் விமானம் வந்தபோது ‘ஓடுதளத்தில் தரையிறங்க வேண்டும்’ என கட்டுப்பாட்டு அறையிடம் விமானி அனுமதி கோரியுள்ளார்.

ஆனால், துரதிஷ்டவசமாக ‘உடனடியாக தரையிறங்க முடியாது. மற்றொரு விமானத்தில் எரிபொருள் கசிவதாக விமானி தகவல் அளித்துள்ளார்.

எனவே, அந்த விமானம் தரையிறங்கிய பிறகு தான் உங்கள் விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்படும். நீங்கள் வானில் வட்டம் அடித்து காத்திருங்கள்’ என கட்டுப்பாட்டு அதிகாரிகள் பதிலளித்துள்ளார்.

இந்த பதில் கிடைத்த அடுத்த விநாடி திடீரென விமானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது(விமானத்தில் எரிபொருள் இல்லையென்றால் மின்சாரம் தானாக துண்டிக்கப்படும்).

விமானத்தில் எரிபொருள் தீர்ந்துவிட்டது என்பது அப்போது தான் விமானிக்கு தெரியவந்துள்ளது. ஆனாலும், இதை அவர் உடனடியாக அவசர அழைப்பு மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு கூறவில்லை.

ஏனெனில், விமானத்தில் போதுமான எரிபொருள் உள்ளது என அவர் தான் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உறுதி செய்தார்.

தற்போது விமானத்தில் எரிபொருள் இல்லை எனத் தகவல் அளித்து அது நிரூபிக்கப்பட்டால், வான்வழி போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக விமானத்தின் உரிமையாளர்களில் ஒருவரான தனக்கு ஒரு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும் என அஞ்சிய அவர் அதனை ஆரம்பத்திலேயே கூறாமல் மறைத்துள்ளார்.

எனினும், நிலைமை கட்டுப்பாட்டை விட்டு சென்றதை உணர்ந்த விமானி விமானத்தின் உண்மை நிலையை அவசர அவசரமாக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார். ஆனால், காலம் கடந்துவிட்டது.

விமானத்தில் சிறிதளவு எரிபொருளும் இல்லாததால் வேகமாக தரையிறங்கி விமானம் மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

பொலிவியா அதிகாரிகளின் அதிரடி உத்தரவு

விபத்து நிகழ்ந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டபோது விமானம் வெடித்து சிதறவில்லை என்ற உண்மையை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விமானத்தில் எரிபொருள் இருந்திருந்தால் விபத்தில் விமானம் நிச்சயமாக வெடித்து சிதறியிருக்கும். எனவே, விமானம் பறந்தபோது அதில் தேவையான எரிபொருள் இல்லை என்பது நிரூபணம் ஆனது.

விசாரணையில் இத்தகவல்கள் வெளியானதை தொடர்ந்து விபத்துக்குள்ளான விமான நிறுவனத்தின் அனைத்து சேவைகளுக்கான உரிமைகளை பொலிவியா அரசு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

f2 f3