தமிழகத்தின், நடுத்தர வர்க்கத்து வாழ்க்கைச் சூழல் கொண்ட லைன் வீடு. ஜான்ஸியும், லட்சுமியும் அங்கு தான் குடியிருக்கிறார்கள். வெளியுலகத்தைப் பொறுத்தவரை இருவரும் சகோதரிகள். ஆனால் ஓரினச்சேர்க்கை ஈர்ப்பால் இருவரும் தம்பதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
ஜான்ஸிக்கு சொந்த ஊர் செங்கற்பட்டு. லட்சுமிக்கு காஞ்சிபுரம். ஒரு எக்ஸ் போர்ட் நிறுவனத்தின் விடுதியில் தங்கியிருந்தபோது காதல் பற்றிக்கொண்டது. இருவரும் வாழ்க்கையில் இணைந்து விட்டார்கள்.
“நான் லட்சுமியை சந்திச்சது ரொம்பவே சங்கடமான தருணம். என் பிரியத்துக்கு உரிய ஒரு பெண்ணை இழந்துட்டு தனிமையில தவிச்ச நேரம். “உன் கூடப் பேசிக்கிட்டே இருக்கனும் போலருக்கு ஜெனி…
உன் மடியில தலை வச்சுப்படுத்தா கவலையெல்லாம் மறந்துபோகுதுடி..”ன்னு லட்சுமி சொல்வா. அதேமாதிரி தேடல் எனக்கும் இருந்துச்சு. சமூகம் எங்களை தம்பதியா ஏத்துக்காதுன்னு தெரியும்.
நம்ம வாழ்க்கையைத் தீர்மானிக்க சமூகத்துக்கு என்ன உரிமை இருக்கு. நாம தானே தீர்மானிக்கனும்…” -என்கிறார் ஜெனி. “எனக்கு நாலைஞ்சு வயசு இருக்கும்போதே, குடும்பத்தோட தேயிலை தோட்டத்துல வேலை செய்ய போயிட்டோம்.
பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். 13 வயசுல எல்லோருக்கும் வர்ற பருவ சிந்தனைகள் எனக்கும் வந்துச்சு. ஆனா, என் தேடல்ல ஆண்கள் இல்லை. என் வயதுள்ள பெண்கள் தான் இருந்தாங்க.
குறிப்பா, உஷா என் மனதுக்கு இதமா இருந்தா. எங்க வீட்டுல எப்பவும் இருக்கமான சூழ்நிலை இருக்கும். என் பிரச்சினைகளை பேசக்கூட முடியாது. யாரும் காது கொடுத்துக் கேட்க மாட்டாங்க.
ஆனா, உஷா என் மேல அவ்வளவு அன்பு காட்டுனா. இணை பிரியாத தோழிகளா இருந்த நாங்க, ஒரு கட்டத்துல பிரிக்க முடியாத இணைகளா மாறிட்டோம்.
ஒருநாள், நாங்க ரெண்டு பேரும் தனிச்சிருந்ததை அம்மா பார்த்திட்டாங்க. பெரிய அதிர்ச்சி அவங்களுக்கு. அடி, உதை. தோழமையா இருந்த ரெண்டு குடும்பமும் கடும் சண்டையோட பிரிஞ்சுச்சு.
உடனடியா ரெண்டு பேருக்குமே திருமண ஏற்பாடு தொடங்குச்சு. “யாராவது பெண் பார்க்க வந்தா, விஷத்தை குடிச்சிட்டு செத்துருவேன்”னு சொல்லிட்டேன். உஷாவை மூணாறுல இருந்த சொந்தக்காரங்க வீட்டுல கொண்டு போய் விட்டுட்டாங்க. மூணாறு போய் வீதி வீதியா தேடினேன்.
மலைப்பகுதியில ஒரு வீட்டுல இருந்தா. அவளுக்கு நிச்சயதார்த்தம் அளவுக்குப் போயிடுச்சு. “இனிமே இங்கே இருக்கக் கூடாது”ன்னு, ஒருநாள் அதிகாலையில ரெண்டு பேரும் ஊரைவிட்டு கிளம்பிட்டோம்.
ஆனா, பஸ் கிளம்புறதுக்கு முன்னாடியே எங்களை பிடிச்சுட்டாங்க. அவ தற்கொலைக்கு முயற்சி செஞ்சா… நான் சுவர்ல முட்டிக்கிட்டு அழுதேன். தேயிலை எஸ்டேட் பூராவும் வேடிக்கை பார்த்துச்சு.
இதுக்கு மேல போராட முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. “சரி… சொந்தக்காரங்கள்லாம் சந்தோஷப்படுற மாதிரி உனக்கான ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கோன்னு சொல்லி அவளை அமைதிப்படுத்திட்டு நான் செங்கற்பட்டுல இருந்த மாமா வீட்டுக்கு வந்துட்டேன்.
ஆனா, வீட்டுல இருக்கப் பிடிக்கலே. வெறுத்துப் போச்சு. ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில சேந்து, ஹோஸ்டல்லயே தங்கிட்டேன். அங்கே தான் லட்சுமியும் வேலை செஞ்சுக்கிட்டிருந்தா. ரொம்ப சீக்கிரமே என்கிட்ட ஒட்டிக்கிட்டா.
மனசுக்கு உகந்த தோழியா இருந்தா. அவ கூட இருந்தா கஷ்டமெல்லாம் மறைஞ்சது போல இருந்துச்சு. பெரிய ஆறுதலா இருந்தா. ஒருநாள், “உன் வாசனை பிடிச்சிருக்குடி… நீ மட்டும் ஆம்பிளையா இருந்தா, உன்னைத்தான் கட்டியிருப்பேன்”னு சொன்னா.
“ஏன் இப்ப கல்யாணம் பண்ணிக்க மாட்டியா”ன்னு கேட்டேன். அப்படித்தான் எங்க உறவு தொடங்குச்சு. லட்சுமியும் என்னை மாதிரி தான். அவளுக்கும் ஆண்கள் மேல ஈர்ப்பே இல்லை. நாங்க ஏன் இப்படி இருக்கோம்ங்கிற கேள்விக்கு எங்ககிட்ட பதில் இல்லை. பிறப்பிலேயே இப்படியான்னு கேட்டா, ஆமான்னு தான் சொல்லுவேன்.
நான் ஆண் இல்லை. பெண் தான். ஆனா, என்னை ஈர்க்கிறது பெண் தான். இது வெறும் பாலியல் மட்டும் சார்ந்த விஷயமில்லை. மனசு சம்பந்தப்பட்டது.
ஒரு ஆணை, என் இணையா நினைச்சுக்கூடப் பார்க்க முடியலே.
அண்ணனா, தம்பியா, அப்பாவா அந்த உறவை நான் மதிக்கிறேன். அதுக்கு மேல, இன்னொரு உறவா அந்த மேலாதிக்கத்தை என்னால தாங்க முடியாது…”- உணர்வுபூர்வமாக பேசுகிறார் ஜான்ஸி.
“நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் மனப்பூர்வமா விரும்பினோம். இது எங்க தோழிகளுக்கும் தெரியும். சில தோழிகள், “இதெல்லாம் என்னடி வாழ்க்கை… வெளியில தெரிஞ்சா, தப்பாப் பேசுவாங்க”ன்னு சொன்னாங்க.
சில தோழிகள் எங்களைப் புரிஞ்சுகிட்டாங்க. அவங்க முன்னாடி மோதிரம் மாத்தி எங்க உறவை உன்னதமாக்கிக்கிட்டோம். திருமண விழாவை கொண்டாடித் தீர்த்தாங்க. தனியா வீடு பிடிச்சு வாழ்க்கையை ஆரம்பிச்சோம். வெளியில எங்க உறவைப் பத்தி யாருக்கும் தெரியாது.
ரெண்டு பேரும் பியூட்டிஷியன் தொழிலைக் கத்துக்கிட்டோம். ஒரு தெலுங்கு சீரியல் நடிகைக்கிட்ட வேலைக்குச் சேந்தோம். கை நிறைய சம்பளம் கிடைக்குது. லட்சுமிக்கு அம்மா இல்லை. அப்பா மட்டும் தான்.
அவருக்கு மாதாமாதம் ஒரு தொகையை அனுப்பிடுவோம். என்னைப் பெத்தவங்களுக்கும் கொஞ்சம் பணம் அனுப்புவோம். எந்த மனச்சிக்கலும் இல்லை. நல்ல புரிதல் உள்ள இணையா லட்சுமி இருக்கா. வீட்டுக்குள்ள என்னை மாமான்னு தான் கூப்பிடுவா. ஒரு வேலையும் செய்ய விடமாட்டா.
“என்ன நீ பொம்பளை மாதிரி வேலையெல்லாம் செய்யிறே”ன்னு கேப்பா… “நான் பொம்பள தாண்டி”ன்னா சிரிப்பா. எப்போதாவது நாங்க, எங்க எதிர்காலத்தைப் பத்தி யோசிக்கிறதுண்டு.
இந்த சமூகத்தில எங்களை மாதிரி வெளியில ஒரு வாழ்க்கையும், வீட்டுக்குள்ள ஒரு வாழ்க்கையும் வாழுற எவ்வளவோ பெண்கள் இருக்காங்க. திருமணமான பெண்கள் நிறைய பேர், இப்படியான மறைமுக படியான மறைமுக உறவோட வாழுறாங்க. நூத்துக்கு ஐம்பது பெண்கள் நிறைய கொடுமைகளை அனுபவிச்சு க்கிட்டு சகிப்புத்தன்மையோட வாழ்ந்துக்கிட்டிருக்காங்க.
ஆண்டவன் புண்ணியத்துல எங்களுக்கு அந்தமாதிரி கொடுமையான வாழ்க்கை அமையலே. எங்களால குழந்தைகளைப் பெத்துக்க முடியாது. ஆனா, தத்தெடுக்க முடியும், அதுக்கு சில சட்ட மாற்றங்கள் வரவேண்டியிருக்கு. அதுவரைக்கும் நாங்க காத்திருப்போம்…” என்கிறார் ஜான்ஸி.
நன்றி விகடன்






