
நாட்டை துண்டாடுவதற்கு பிரபாகரனுக்கு இடம்கொடுக்கப்படாதது போல வேறு எந்த தரப்பினருக்கும் இடமளிக்கப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஆட்சி நடத்த ஏனைய மாகாணங்களுக்கு வழங்கிய அதிகாரங்களே இந்த மாகாணத்திற்கும் வழங்கியுள்ளோம்.
இன்று சிலரது தேர்தல் விஞ்ஞாபனங்களை எடுத்துப் பார்க்கும்போது நான்கு வருடங்களுக்கு முன் இருந்த கோரிக்கைகளே மீண்டும் விடுக்கப்படுகிறது. அவர்களுக்கு நான் விசேடமாக ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த நாட்டை துண்டு துண்டாக பிரிக்க பிரபாகரனுக்கு இடமளிக்கப்படாதது போன்று உங்களுக்கும் இடமளிக்கப்படமாட்டாது. அதனை தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். அந்த கோரிக்கையின் பிரதிபலன்களை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
அன்று முஸ்லிம் மக்களை தங்கள் கையில் கிடைத்த உடைகளோடு செல்லுமாறு விரட்டினர். சிங்கள மக்களையும் விரட்டியடித்தனர்.
ஜனநாயகத்தை மதித்த தமிழ் தலைவர்களை ஒவ்வொருவராக கொலை செய்தனர்.
அதனால் அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இடமளிக்கப்படமாட்டாது. இந்த அரசாங்கம் இனவாத்திற்கு எதிரானது.
அனைத்து மதங்களையும் நாங்கள் மதிக்கிறோம். ஒவ்வொரு இனத்தையும் மதிக்கிறோம்.
அவர்களது பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றை பாதுகாத்துஅனைவரும் சமாதானமாக ஒரே நாட்டில் வாழ பழகிக் கொள்ள வேண்டும். எனவே அனைவரும் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப அபிவிருத்தி செய்ய தயாராகவேண்டும்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பழகிக் கொள்ள வேண்டும். தனியே கொள்கை ஒன்றை உருவாக்கிக் கொண்டு ஈழம் அமைப்போம், நாட்டைப் பிரிப்போம் என்று கூறினால் நாட்டில் வாழ முடியாது.
அன்று கதைத்ததைப் போன்று இந்த நாட்டை வேறுபடுத்த இன்று கதைத்து பயனில்லை. இப்போதுள்ள சுதந்திரைத்தை இழக்க யாரும் தயாரில்லை. தம்புள்ளையில் சிங்கள பிள்ளைகள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என கோருகின்றனர்.
கிளிநொச்சி மக்கள் சிங்கள ஆசிரியர் ஒருவரை கோருக்கின்றனர்.
இவைதான் மக்களின் மனதில் உள்ளது. இனவாதம், மதவாதத்தை தூண்டினால் நாட்டில் அபிவிருத்தியை காண முடியாது.
வடக்கே காணிப் பிரச்சிணை, வீட்டுப் பிரச்சினை இருப்பதை நான் அறிவேன். அனைவரும் இணைந்தால்தான் அதனை செய்யமுடியும். ஒரே மாதத்தில் அதனை செய்ய முடியாது.
பல வருடங்களாக தேங்கிக் கிடந்த பிரச்சினைகளை நாங்கள் தீர்த்து வருகிறோம் என ஜனாதிபதி மஹிந்த மேலும் தெரிவித்தார்.





