இறந்து விடுவான் என கூறப்பட்ட குழந்தையைத் தத்தெடுத்து மறுவாழ்வளித்த தம்பதியர்!!

1123

dead

பல்கேரியாவைச் சேர்ந்த ரியான் எனும் சிறுவன் வளர்ச்சிக் குறைபாடு, இதயக் கோளாறுடன் பிறந்ததால் 7 வயதில் வெறும் மூன்றரைக் கிலோவுடன் காட்சியளித்தான்.

ஆதரவற்றோர் இல்லத்தில் விசேட கவனிப்பு செலுத்தப்பட வேண்டிய நிலையில் இருந்த ரியானை, இணையத்தளம் மூலம் அறிந்த அமெரிக்காவில் வசிக்கும் டேவிட், பிரிசில்லா மோர்ஸ் தம்பதியர் தத்தெடுத்தனர்.

விரைவில் இறந்து விடுவான் என்று தெரிவிக்கப்பட்டு வழங்கப்பட்ட ரியானை, அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றனர் அந்த தம்பதியர்.

சிகிச்சைக்காக அவனை மருத்துவமனையில் சேர்த்த போது, அமெரிக்க மருத்துவர்களும் அவன் இறந்துவிடுவான் என்றே கூறிவிட்டனர்.

எப்படியாவது ரியானைக் காப்பாற்ற வேண்டும் என விரும்பிய டேவிட், பிரிசில்லா மோர்ஸ் தம்பதியர், அவனை வேறொரு மருத்துவமனையில் சேர்த்து குழாய் மூலம் சத்தான உணவுகளை உட்செலுத்தினர்.

விசேட சிகிச்சைகளையும் தொடர்ந்ததன் பயனாய், ஏதோ அற்புதம் நிகழ ஆரம்பித்தது. ரியானின் உடல் கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி, ஒரு வருடத்தில் 10.5 கிலோ எடையை அடைந்தான்.

மருத்துவர்களின் வார்த்தைகளைத் தாண்டியும் ரியான் பிழைத்திருக்கிறான். சின்னச் சின்ன வார்த்தைகளைப் பேசவும் பழகிவிட்டான். அடுத்த வருடம் அவனைப் பாடசாலையில் சேர்க்கும் முனைப்புடன் இருக்கிறார் பிரிசில்லா மோர்ஸ்.

டேவிட், பிரிசில்லா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ரஷ்யாவில் இருந்து ஒரு பெண் குழந்தையையும் தத்தெடுத்திருக்கிறார்கள்.

ஆனாலும் ரியான் மீது இவ்வளவு அன்பு செலுத்த பிரிசில்லாவிற்குக் காரணங்கள் இருந்தன. பிரிசில்லாவின் அண்ணனும் விசேட தேவையுடைய குழந்தையாகப் பிறந்தது தான் அந்தக் காரணம்.

தனது பெற்றோர் அவனை அக்கறையாகப் பார்த்துக்கொண்ட போதும், தனது அண்ணன் 9 வயதில் தங்களை விட்டுப் பிரிந்ததாக பிரிசில்லா கூறினார்.

தன் பெற்றோர் தனது அண்ணனுக்கு வழங்கிய அந்த அதீத அக்கறையை தானும் ஒரு விசேட தேவையுடைய குழந்தைக்கு வழங்க வேண்டும் என்பதை பிரிசில்லா ஓர் இலட்சியமாகவே கொண்டிருந்தார்.

ரியான் தற்போது, ஓரளவு குணம்பெற்ற குழந்தையாகிவிட்டான்.

d1 d2 d3 d4 d5 d6