பொய் வாக்கு மூலம் அளித்ததன் மூலம் அப்பாவி நபர் ஒருவர் 5 மாதங்கள் சிறையில் வாடுவதற்குக் காரணமான யுவதி ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று ஒரு வருட கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இங்கிலாந்தின் எசெக்ஸ் பிராந்தியத்தில் 2014 ஆம் ஆண்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின்போது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருடப்பட்ட துப்பாக்கியொன்றை அவர் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது லீ குட்செல் எனும் மற்றொரு நபரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்தனர்.
இரண்டாவது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதை அறிந்த ஹேலி கார்ட்டர் எனும் யுவதி, அந் நபருக்கு எதிராக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
இதனால், லீ குட்செல் 5 மாதங்கள் விளக்கமறியலில் இருந்தார். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நபர் மீதான வழக்கை பொலிஸார் கைவிட்டனர். எனினும், லீ குட்செலுக்கு எதிராக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது ஹேலி கார்ட்டர் சாட்சியம் அளிப்பதற்கு முன்வரவில்லை.
இந்நிலையில் புத்தாண்டு பிறப்புக் கொண்டாட்டத்தின்போது லீ குட்செல் அப்பாவி என தனது நண்பர் ஒருவரிடம் 23 வயதான ஹேலி கார்ட்டர் கூறுவதை அவரின் நண்பர் வீடியோவில் பதிவுசெய்துகொண்டார்.
இந்த வீடியோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, ஹேலி கார்ட்டருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஹேலி கார்ட்டர் 18 மாதங்கள் சமூக சேவை செய்ய வேண்டும் எனவும் 1,500 ஸ்ரேலிங் பவுண் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது.
ஆனால், இத் தண்டனை போதுமானதல்ல எனக் கூறி வழக்குத் தொடுநர்கள் மேன்முறையீடு செய்தனர். இதையடுத்து ஹேலி கார்ட்டருக்கு ஒரு வருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.






