நத்தார் பண்டிகைக் கால கொண்டாட்டதை முன்னிட்டு றோயல் டேர்வ் க்ளப் நுவரெலியாவில் ஏற்பாடு செய்துள்ள குதிரையோட்டப் போட்டியில் நத்தார் தாத்தாவின் பிரசன்னத்துடன் நடைபெறவுள்ளது.
நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் நடைபெறும் குதிரை ஓட்டப் போட்டியின் போது நத்தார் தாத்தா சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்களுடன் பரிசுகளை வழங்கவுள்ளமை விடேச அம்சமாகும்.
முதல் தடவையாக பெண் குதிரையோட்டி ஒருவர் பங்குபற்றவுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த என்.ரூபா என்ற பெண் குதிரையோட்டி ஆண்களுக்கு இணையாக குதிரையோட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.
ஆண்களுடன் பெண்களும் ஈடுகொடுத்து குதிரையோட்டத்தில் பங்குபற்ற முடியும் என்பதை இதன் மூலம் றோயல் டேர்வ் க்ளப் நிரூபிக்கவுள்ளதென பதில் நிறைவேற்கு அதிகாரியும் குதிரையோட்டி (ஜொக்கி) பயிற்றுநருமான சின்கிளயார் மார்ஷல் தெரிவித்தார்.
டிசம்பர் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள குதிரையோட்டப் போட்டிகளின்போது பெறப்படும் வசூல் அனைத்தையும் புற்றுநோய் பராமரிப்பு அறக்கட்டளைக்கு எட்வர்ட்ஸ் தம்பதியினர் அன்பளிப்பு செய்வர் என்பதை றோயல் டேர்வ் கிளப் பிரதிநிதி உறுதி செய்தார்.
இதேவேளை இந்த அன்பளிப்பை புற்றுநோய் பராமரிப்பு அறக்கட்டளை பொறுப்பாளர் டாக்டர் சமதி பெற்றுக்கொள்வார். இதனைவிட தீபிகா ஜயக்கொடி தனது பரிசுப்பணத்தில் 50 வீதத்தை நுவரெலியா போனிக் குதிரை சங்கத்துக்கு நன்கொடையாக வழங்க இணங்கியுள்ளார்.
கவர்ச்சிகரமான தொப்பி, மிகச் சிறப்பாக ஆடையணிந்த பெண், சிறந்த தம்பதிகள், மிகச் சிறப்பாக ஆடையணிந்த சீமான் ஆகியோருக்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
குதிரையோட்டப் போட்டிகளை கொண்டாட்டம் மிகுந்த விழாவாக நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளதாக றோயல் டேர்வ் கிளப் தலைவர் சுரஞ்சித் பிரேமதாச தெரிவித்தார். அடுத்த வருட குதிரையோட்டப் போட்டிகள் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகி மார்ச், ஏப்ரல் மாதங்கள் வரை தொடரும்.







