வவுனியாவில் இளைஞர் ஒருவர் மீது நேற்று மாலை மர்மநபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வைரவ புளியங்குளம் பகுதியில் வைத்து இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா வைரவபுளியங்குளம், வைரவர் கோவில் வீதிப் பகுதியில் உள்ள ஆங்கில மொழிப் பாடசாலை அருகில் முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த இளைஞர் குழுவுக்கும், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதன்போது முச்சக்கர வண்டியில் வந்த குழு தாக்கியதில் ஒரு இளைஞன் காயமடைந்து வீதியில் விழுந்து கிடந்துள்ளார். இதன்போது அவ்விடத்திற்கு வந்த வேறு இளைஞர்களால் காயமடைந்த குறித்த இளைஞன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குறித்த சம்பவத்தில் வவுனியாவின் வேறு பகுதியைச் சேர்ந்தவர்களே வைரவபுளியங்குளம் பகுதியில் வந்து மோதிக் கொண்டதாக தெரியவருகிறது.
இதேவேளை, வவுனியா வைரவபுளியங்குளம், வைரவகோவில் வீதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்குமாறு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரப்பட்டிருந்த போதும் இதுவரை அது அமைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-தமிழ்வின்-









