வவுனியா ஓமந்தை முருகன் ஆலயத்தில் திருடர்கள் கைவரிசை!!

284

வவுனியா – ஒமந்தை, ஆறுமுகத்தான் புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று பகல் 11 மணியளவில் பூஜைக்காக குருக்கள் ஆலயத்திற்குச் சென்ற போதே ஆலயம் உடைக்கப்பட்டு திருடப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஓமந்தை பொலிசாருக்கு ஆலய நிர்வாகத்தால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான் புதுக்குளம் பகுதியில் உள்ள முருகன் ஆலயம் பழமை வாய்ந்தது. ஆறுமுகத்தான் புதுக்குளத்தை சூழவுள்ள சேமமடு, மாளிகை, அலைகல்லுப்போட்டகுளம், பன்றிக்கெய்தகுளம் என 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வழிபட்டு வரும் ஒரு ஆலயம் ஆகும்.

1954ஆம் ஆண்டு முதல் கட்டுமானவேலைகள் இடம்பெற்று காட்சியளித்த இவ் ஆலயத்தின் மதில் வழியாக உள் நுழைந்த திருடர்கள் வலது புறமாக உள்ள கதவை உடைத்து ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருந்த ஐம்பொன் முருகவேல், ஆலயத்தில் இருந்த வள்ளி, தெய்வானை சிலைகள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளதுடன், ஆலய உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் திருடப்பட்டுள்ளது.

செப்பில் செய்யப்பட்டிருந்த வைரவர் சிலை உடைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.