விமானத்தில் இருந்து பெண் பயணியை தரதரவென இழுத்து வெளியேற்றிய பொலிஸ் : காரணம் என்ன?

336

அமெரிக்காவில் தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்றில் பெண் பயணி ஒருவரை அங்குள்ள பொலிஸ் தரதரவென இழுத்து வெளியேற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெட்ராய்ட் பெருநகர விமான நிலையத்தில் குறித்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. இங்கு புறப்பட தயாராக நின்ற டெல்டா விமானத்தில் பெண்மணி ஒருவர் திடீரென்று புகுந்து தமது இருக்கைக்கு நேர் மேலே இருக்கும் பொருட்கள் வைக்கும் பகுதியில் தனியாக அதிக இடம் வேண்டும் என கேட்டு முதலில் பிரச்னை செய்துள்ளார்.

இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. குறித்த பெண்மணி விடாப்பிடியாக தமக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்தியே வந்துள்ளார். இதனிடையே அந்த பெண்மணி உரிய அனுமதி பெறாமல் விமானத்தில் பயணிக்க முயன்றுள்ளதாகவும் அவரது பெட்டி உள்ளிட்ட பொருட்களை சோதனைக்கு உட்படுத்தவில்லை எனவும் தெரிய வந்தது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து குறித்த பெண்மணியுடன் விவதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். மேலும் விமானத்தில் இருந்து வெளியேறவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனிடையே குறித்த டெல்டா நிறுவனம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அவர்கள் வந்து அந்த பெண்மணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர் விமானத்தை விட்டு வெளியேற மறுத்து அடம்பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பொலிசார் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து விமானத்தில் இருந்து வெளியெற்றியுள்ளனர்.

தொடர்ந்து சக பயணிகளுக்கு தொல்லை தந்த குற்றத்திற்காகவும் விமான நிலைய சட்டத்திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறி கைது செய்துள்ளனர்.