மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி போட்டியில் பங்குபற்றும் அழகுராணிகளை சுறாக்களுடன் நீந்த அனுமதித்தமை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
2016 மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி (பிரபஞ்ச அழகுராணி) போட்டி பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்குபற்றும் பல நாடுகளின் அழகுராணிகள் பலர் பிலிப்பைன்ஸில் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்களில் 12 அழகுராணிகள் பிலிப்பைன்ஸின் செபு மாகாணத்திலுள்ள ஒஸ்லொப் நகர கடற்பகுதியில், சுறாக்களுடன் பார்வையிடுவதற்காக போட்டி ஏற்பாட்டாளர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒஸ்லொப் மாநகர சபையும் மிஸ் யூனிவர்ஸ் அமைப்பும் இணைந்து இச் சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தன. சிறிய திமிங்கிலமொன்றுடன் பிலிப்பைன்ஸ் அழகுராணி மெக்ஸைன் மெதினா நீந்தும் புகைப்படங்களும் வெளியாகின.
இவ் விடயம் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. அழிந்துவரும் நிலையிலுள்ள இனத்தைச் சேர்ந்த திமிங்கில சுறா எனும் சுறாக்களுடன் நீந்துவதற்கு அழகுராணிகளை அனுமதித்தமை நெறிமுறைகளை மீறிய ஒரு நடவடிக்கை என சுற்றாடல் பாதுகாப்பு ஆர்வலர்களும் முன்னாள் அழகுராணிகளும் விமர்சித்துள்ளனர்.
மனிதத் தலையீடுகள் காரணமாக இச் சுறாக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திமிங்கிலச் சுறாக்களுடன் மனிதர்கள் நீந்துவது நீண்ட காலமாக விமர்சிக் கப்படுகிறது. இதை ஒரு சுற்றாடல் சுற்றுலாத் திட்டமாக கருத முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.








