சிறுமிகளுக்கு போதைப் பொருட்களைக் கொடுத்து அவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் குழுவொன்றைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் 9 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
32 வயதான லெய்லா கஸம் எனும் இப் பெண்ணும் அவரின் காதலரான போல் மைக்கல் சில்வர்தோர்ன் (36) என்பவரும் லண்டனில் நடைபெற்ற கேளிக்கை விருந்தொன்றின்போது 15 வயதான சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த மார்ச் மாதம் தலைமறைவாகினர். ஸ்பெய்னுக்கு தப்பிச் சென்ற லெய்லா கஸம், அங்குள்ள பண்ணையொன்றில் பணியாற்றி வந்தார்.
இதற்கிடையில் லெய்லா கஸமையும் போல் மைக்கல் சில்வர்தோர்னையும் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு பிரித்தானிய பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, லெய்லா பணியாற்றிய பண்ணையின் உரிமையாளர் அவரை அடையாளம் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின் பிரிட்டனுக்கு அழைத்துவரப்பட்ட லெய்லா கஸமுக்கு 9 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அவரின் காதலரான போல் மைக்கல் சில்வர் தோர்னை அதிகாரிகள் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.






