கல்விப் பொது தராதரப் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ஒருவன் தனது இரு நண்பர்களுடன் இணைந்து கடத்தல் நாடகம் ஆடி தந்தையிடம் எட்டு கோடி ரூபா கப்பம் கோரிய சம்பவமொன்று தங்கொட்டுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
தங்கொட்டுவ கோணவில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடமே இவ்வாறு அவரது மகன் கப்பம் கோரியதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மோரக்குளி மற்றும் தங்கெட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இரு நண்பர்களே குறித்த மாணவனுடன் இணைந்து இவ்வாறு கடத்தல் நாடகம் ஆடியுள்ளனர்.
கடந்த 13 ஆம் திகதி மாலைவேளையில் வேன் ஒன்றில் வந்தவர்கள் குறித்த மாணவனை கடத்தி சென்றதாகவும் அவரை விடுவிப்பதாயின் எட்டு கோடி ரூபாவை கப்பமாக வழங்குமாறும் கடத்தப்பட்ட மாணவனின் தந்தைக்கு தொலைபேசியூடாக அழைப்பு விடுத்து மிரட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த தங்கொட்டுவ பொலிஸார் கடத்தப்பட்டாக கூறப்படும் மாணவனை தங்கொட்டுவ பிரதேசத்தில் கைவிடப்பட்ட எண்ணெய் ஆலையொன்றிலிருந்து மீட்டுள்ளனர்.
இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட ஏனைய இரு மாணவர்களையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.






