பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்குமாறு 54 உறுப்பு நாடுகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடிதம்!!

292

hrw

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என அதன் உறுப்பு நாடுகள் அனைத்திடமும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுநலவாய அமைப்புகளில் உள்ள 54 உறுப்பு நாடுகளுக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து நடவடிக்கை எடுக்க இலங்கை தவறி வருவதால் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் அதன் உறுப்பு நாடுகள் பங்கேற்கக் கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பொதுநலவாய மாநாட்டுக்குச் செல்ல தீர்மானித்துள்ள நாடுகள் தங்கள் சார்பில் கீழ்நிலை பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அது பொது மக்கள் அதிருப்தியின் வெளிப்பாடாக அமையும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

போர் குற்றம் தொடர்பில் பொறுப்புக் கூற இலங்கை தவறியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிரெட் எடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்றால் அது நீதியை எதிர்பார்த்துள்ள மக்களுக்கு சொல்லப்படும் தவறான செய்தியாக மாறிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படுவது அந்நாட்டின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்தவே என கூறப்படுவதில் சந்தேகம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் மாநாட்டில் பங்கேற்காது அதன் உறுப்பு நாடுகள் தங்களது நாட்டில் இருந்து பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கைக்கு பொது அழுத்தம் விடுக்க வேண்டும் என மனித உரிமைகள் காப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிரெட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.