போதைப் பொருள் உட்கொண்ட பின்னர் 4 மாத வயதான குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தாரென அமெரிக்காவின் முன்னாள் அழகுராணி ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்டின் சோரிச் லிசையுஸ் எனும் இந்த யுவதி 2013ஆம் ஆண்டில் மிஸ் அரிஸோனா அழகுராணி போட்டியில் பங்குபற்றியவர்.
இவர் கடந்த மே மாதம் கொகேய்ன் போதைப்பொருள் உட்கொண்ட பின்னர் தனது 4 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய்ப்பால் அருந்திய குழந்தை மயக்கமடைந்ததால், அக் குழந்தையை லிசையுஸும் அவரின் கணவரும் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையின் ரத்தத்தை பரிசோதனை செய்வதற்கு மருத்துவர்கள் முயன்றபோது இவ்விருவரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும், குழந்தையை மற்றொரு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு இவர்கள் சம்மதித்தனர்.
இதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் டயமன்ட் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை மாற்றியது. ஆனால் அங்கும் குழந்தைக்கு நச்சுயியல் சோதனை நடத்த மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இவ் விடயம் குறித்து குழந்தைகள் நலத்துறை உயரதிகரிகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதையடுத்து குழந்தைகள் நலத்துறை அதிகாரி கள் உதவியுடன் மேற்படி குழந்தைக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
அப்போது குழந்தையின் உடலில் கொகேய்ன் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பாக த கிறிஸ்டின் சோரிச் லிசையுஸ் மற்றும் அவரின் கணவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தான் கொகேய்ன் உட்கொள்ளவில்லை எனவும் ஆனால், குழந்தையின் உடலில் எவ்வாறு கொகேய்ன் சென்றது என்பது தெரியாது எனவும் த கிறிஸ்டின் சோரிச் லிசையுஸ் ஆரம்பத்தில் தெரிவித்தார்.
அவரின் கணவரும் இதையே கூறினார். எனினும், ஒரு கட்டத்தில் கிறிஸ்டின் சோரிச் லிசையுஸ் உண்மையை ஒப்புக்கொண்டார். விருந்தொன்றில் கொகேய்ன் உட்கொண்டு 12 மணித்தியாலங்களின் பின்னர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததாக அவர் கூறினார்.
அதன்பின் கிறிஸ்டின் சோரிச் லிசையுஸின்; வீட்டில் சோதனை நடத்திய பொலிஸார், கொகேய்ன் போதை பொருளை கைப்பற்றியதுடன் இருவரையும் கைது செய்தனர். தற்போது இவர்கள் இருவருக்கும் எதிராக வழக்குத் தொடுக் கப்பட்டுள்ளது.







