தொழிலதிபர்களை குறி வைத்து 11 பேரை ஏமாற்றி திருமணம் செய்து, பின்னர் நகை, பணத்துடன் தப்பியோடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் லோரன் ஜஸ்டின் ஒரு தொழிலதிபர். இவர் கடந்த ஒக்டோபர் மாதம் கொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்ரை அளித்துள்ளார்.
அதில், தன்னுடைய மனைவி மேகா பார்கவ் (28) திடீரென காணாமல் போய் விட்டதாகவும், வீட்டிலிருந்த 15 இலட்சம் ரூபா, நகை உள்ளிட்டவை மாயமானதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து மேகாவின் புகைப்படம், செல்போன் எண் உள்ளிட்டவைகளை வைத்து கொச்சி பொலிஸார் நடத்திய விசாரணையில் இதேபோல் அவர் கேரள மாநிலத்தில் மேலும் 3 பேரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு நகை, பணத்துடன் தப்பியோடியமை தெரியவந்தது. ஏனைய 3 பேரும் இதை வெளியில் சொன்னால் அவமானம் என கருதி பொலிஸில் முறையிடாமல் இருந்துள்ளனர்.
இதையடுத்து மேகா எங்கு உள்ளார் என கொச்சி பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கேரளாவில் 4 பேர் மட்டுமன்றி மும்பை, புனே, இந்தூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட ஊர்களில் மொத்தம் 11 பேரை ஏமாற்றி திருமணம் செய்த தகவல் கிடைத்துள்ளது.
இதனிடையே மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மேகா பார்கவ், டில்லி அருகே நொய்டாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக மேகாவை நொய்டா பொலிஸாரின் உதவியுடன் கொச்சி பொலிஸார் தேடினர்.
இந்தநிலையில் கடந்த வாரம் மேகா கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரி பிராசி, அவருடைய கணவர் தேவேந்திர சர்மா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து பொலிஸார் தெரிவித்திருப்பதாவது, மேகா மிகவும் அழகான தோற்றத்துடன் உள்ளார். இதனால் அவருடைய அழகில் மயங்கிய தொழிலதிபர்கள் அவரைப் பற்றியும், அவருடைய குடும்பத்தைப் பற்றியும் அலசி ஆராயாமல் திருமணம் செய்து உள்ளனர்.
தொழிலதிபர்கள் உள்ளிட்ட வசதி படைத்தவர்களை குறிவைத்து மேகா திருமண வேட்டை நடத்தி உள்ளார். மணமகள் தேவை விளம்பரத்தில் வரும் விவாகரத்து ஆனவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பணக்கார மணமகன்களே அவருடைய இலக்காகும்.
திருமணம் குறித்து தன்னுடைய சகோதரி, அவருடைய கணவர் மூலம் பேசவைத்த மேகா பின்னர் தானே பேசி, தன்னுடைய புகைப்படங்களை அனுப்பி தொழிலதிபர்களை கவர்ந்துள்ளார்.
இதில் ஏமாந்த தொழிலதிபர்களைத் திருமணம் செய்து கொண்டு அவர்களின் நம்பிக்கையை மேகா பெற்றுள்ளார். சில மாதங்கள் அவர்களுடன் கணவன் மனைவியாக வாழ்ந்த அவர் பின்னர் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு மயக்கமருந்து கொடுத்துவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளார்.
சுமார் 2 மாத கால தேடலின்பின்னர் அவர் சிக்கியுள்ளார் என கூறியுள்ளனர்.
ஆனால் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பொலிஸாரிடம் மேகா மறுத்தார்.
இது குறித்து அவர், “நான் யாரையும் ஏமாற்றவில்லை. கேரளாவில் திருமணம் செய்த 3 பேரையும் விவாகரத்துச் செய்து விட்டேன். 4ஆவதாக லோரன் ஜஸ்டினுடன் திருமணம் நடந்தது. எங்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நான் பிரிந்து சென்றேன்” என கூறியுள்ளார்.
இதனிடையே மேகா எவ்வளவு பணம், நகை மோசடி செய்தார் என அறிய அவரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






