போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மறைந்திருந்த இடமொன்றை “நத்தார் தாத்தா” முற்றுகையிட்டு சந்தேக நபர்களை கைது செய்த சம்பவம் பெரு நாட்டில் இடம்பெற்றுள்ளது.
பெரு நாட்டின் பொலிஸ் உத்தியோகத்தர்களே நத்தார் தாத்தா போன்று வேடமணிந்து சென்று இந்த முற்றுகையை நடத்தினர். பெரு தலைநகர் லீமாவில் உள்ள வீடொன்றில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சிலர் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இக் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்குத் தீர்மானித்த பெரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நத்தார் தாத்தா வேடத்தில் சென்று அவ் வீட்டை சுற்றிவளைத்தனர்.
நத்தார் தாத்தா வேஷத்திலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சம்மட்டி ஒன்றினால் கதவை உடைக்க ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளே நுழைந்து சந்தேக நபர்களை மடக்கிப்பிடித்து கைவிலங்கிட்டனர்.
இந்த முற்றுகையின்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ இணையத்தில் பெரும் எண்ணிக்கையானோரால் பார்வையிடப்பட்டுள்ளது.







