ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராகப் போராடிவரும் 23 வயதான் ஜோன்னா பலானி எனும் யுவதியை கொல்பவருக்கு ஒரு மில்லியன் டொலர் அன்பளிப்பு அளிப்பதாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது.
குர்திஷ் கிளர்ச்சியாளர் களுடன் இணைந்து, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக போராடிய ஜோன்னா பலானி தற்போது டென்மார்க்கில் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானை பூர்வீகமாகக் கொண்டவர் ஜோன்னா பலானி, இவரது குடும் பம் பல ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க் நாட்டில் குடியேறியது. பின், டென்மார்க் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவந்த ஜோன்னா பலானி, தனது கல்வியை இடைநிறுத்திவிட்டு குர்திஸ் இயக்கத்தோடு இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி போராடினார்.
சிரியாவுக்கு சென்று போராட்டத்தைத் தொடர்வதற்கு ஜோன்னா முயற்சித்தபோது, சிரிய எல்லைப் பகுதிகளில் அந்த நாட்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.
அதையடுத்து டென்மார்க் அரசு, ஜோன்னா பலானியின் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டையை பறிமுதல் செய்து தமது நாட்டுக்கு அழைத்துச் சென்றது. சட்டவிரோதமாக நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றதாலும், போராட்டக் குழுவோடு இணைந்து செயற்பட்ட குற்றத்துக்காகவும் டென்மார்க் நீதிமன்றத்தில் ஜோன்னா பலானிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஜோன்னா மீண்டும் யுத்தத்தில் பங்குபற்றுவதைத் தடுப்பதற்காக கடந்த செப்டெம்பர் மாதம் அவருக்கு 12 மாத கால பயணத்தடை விதிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜூன் மாதம் தான் கத்தாருக்கு பயணம் செய்ததை கடந்த வாரம் ஜோன்னா பலானி ஒப்புககொண்டார்.
அதையடுத்து பயணத் தடையை மீறியமைக்காக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவருக்கு 2 வருடம் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் இணைந்து போராடிய பின்னர் தாயகம் திரும்புவர்களுக்கு டென் மார்க் அரசு தொழில் வாய்ப்பையும் வழங்கும் நிலை யில், டென் மார்க் அரச படைகள் போராடும் தரப்புடன் இணைந்து போரிட்டமை க்காக ஜோன்னாவை தண்டிப்பது அபத்தமானது என அவரின் சட்டத்தரணி கூறியுள்ளார்.
இந்நிலையில், தமக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய ஜோன்னா பலானியை கொல்பவருக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர் வழங்கப்படும் என ஐ.எஸ். இயக்கம் அறிவித்துள்ளது.






