அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து நிவாரண விலையில் விற்பனை செய்யத் திட்டம்!!

218

கோரப்பட்டுள்ள அரிசிக்கான விலைகள் இன்று கிடைக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

புதுடில்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இந்தியாவிலிருந்து அரிசி விலைகளை கோரியுள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.பி. தென்னக்கோன் குறிப்பிட்டார்.

அரிசி விலைகள் கிடைத்தவுடன் முதற்கட்டமாக பத்தாயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் ஒரு வாரத்திற்குள் அரிசி தொகையை இறக்குமதி செய்ய எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் இருந்தும் முன்னர் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால், அந்த நாடுகளிலும் அரிசியின் விலைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நெற் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் கையிருப்பிலுள்ள அரிசி தொகையும் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் பருப்பு, சீனி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் இறக்குமதி செய்து மக்களுக்கு நிவாரண விலையில் விற்பனை செய்வதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை சதொச நிறுவனத்தின் ஊடாக மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்காலத்தில் 25 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்கள் இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நாடளாவிய ரீதியில் எண்ணாயிரம் விற்பனை அலகுகளை அமைப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை அலகுகளை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.