இவ் வருடத்திற்கான வடக்கு மாகாண விளையாட்டுத்துறை நட்சத்திர விருதை மகாஜனா கல்லூரி மாணவி அனித்தா ஜெகதீஸ்வரன் வென்றெடுத்தார்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் நிகழ்ச்சியில் 3.41 மீற்றர் உயரம் தாவி புதிய இலங்கை சாதனையை நிலைநாட்டிய அனிதா அகில இலங்கை பாடாசலைகள் விளையாட்டு விழா உட்பட இன்னும் சில விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டிய பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாண விளையாட்டு நட்சத்திரம் விருதை வென்றெடுத்தார்.
சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏழாவது வடக்கு மாகாண வர்ண இரவு விழாவில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் பி. குருகுலராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விளையாட்டு நட்சத்திர விருது உட்பட மற்றைய பிரதான விருதுகளை வழங்கினார்.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணிகளில் இடம்பெற்ற 12 பேருக்கு விசேட விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் தேசிய மற்றும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற சுமார் 300 பேருக்கு வர்ண விருதுகள் வழங்கப்பட்டன.







