சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை திரையரங்குகளில் 8 நாட்கள் இலவச சினிமா!!

348

cinema 100

இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் வரும் 21ம் திகதி முதல் 24ம் திகதி வரை கொண்டாடப்படுகிறது. நேரு விளையாட்டு அரங்கில் இவ்விழா நடக்கிறது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா இதனை தொடங்கி வைக்கிறார்.

சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி நடிகர், நடிகைகள் சென்னையில் குவிகிறார்கள். விழா ஏற்பாடுகளை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தீவிரமாக செய்து வருகிறது. விழாவையொட்டி நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

21ம் திகதி மாலை 5.30 மணிக்கு தமிழ் பட உலகினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் 22ம் திகதி காலை கன்னட நடிகர்கள் கலை நிகழ்ச்சியும் மாலை தெலுங்கு நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 23ம் திகதி காலை மலையாள நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

24ம் திகதி சினிமா நூற்றாண்டு நிறைவு விழா நடக்கிறது. இதில் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, கவர்னர் ரோசய்யா, முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல் –மந்திரி சீத்தாராமையா, கேரள முதல்– மந்திரி உம்மன் சாண்டி ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் கலந்து கொள்கிறார்.

நான்கு நாள் கலை நிகழ்ச்சிகளிலும் அந்தந்த மாநில நடிகர், நடிகைகள் பங்கேற்று நடனம் ஆடுகிறார்கள். நடிகைகள் நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, காஜல் அகர்வால், தமன்னா, பிரியாமணி, சமந்தா, ஹன்சிகா, அனுஷ்கா, அமலாபால், அஞ்சலி, ஓவியா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடனம் ஆடுகிறார்கள்.

நடிகர்களும் நடனத்தில் பங்கேற்கின்றனர். ரஜினி, கமல், விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, கார்த்தி, ஆர்யா, தனுஷ், சிம்பு, மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கு நடிகர்கள் பவன் கல்யான், ராம்சரன், ரவிதேஜா, மகேஷ்பாபு, போன்றோரும் பங்கேற்கின்றனர்.

சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி வருகிற 19ம் திகதி முதல் 26ம் திகதி வரை சென்னை சத்யம் மற்றும் அபிராமி தியேட்டர்களில் பழம்பெரும் எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த படங்களும் இலவசமாக திரையிடப்படுகிறது.