ஆழிப் பேரலைக்கு இன்றோடு ஆண்டுகள் 12!!

273

அமைதியான அதிகாலை நேரம். உலகமே நினைத்துப் பார்த்திருக்காது இப்படி ஒரு நாளாக இந்த நாள் மாறும் என்று. அமைதியாக இருந்த இயற்கை பொங்கி எழுந்து உலக வரலாற்றையே திசைத்திருப்பி போட்டது. அது தான் உலக வரலாற்றில் கறுப்பு ஞாயிறு என பதியப்பட்ட 2004 டிசம்பர் 26

இலகுவில் மறந்திருக்க மாட்டோம். நத்தார் பண்டிகையை கோலாகலமாக குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு மறுநாளே தமது குடும்பத்தை இழந்து நின்ற மக்களின் கதை பேசும் நாள் இது.

சுனாமி எனும் இராட்சத அலைக்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து, அழுது புரண்ட நிமிடங்கள் உருண்டோடி இன்றோடு 12 வருடங்களை தொட்டு விட்டோம்.

தெற்காசிய கடலோர நாடுகளை சில மணி நேரங்களுக்கு உலுக்கி சுமார் 3 லட்சம் மனித உயிர்களை காவு கொண்டதுடன், பல லட்சம் மக்களை நொடிப் பொழுதில் இடம்பெயர வைத்து விட்டது.

சுனாமி எனும் பேரலையினால் எத்தனை கிராமங்கள் உலக வரைபடத்தில் இருந்து துடைத்தெறியப்பட்டன. அந்த இழப்பின் வேதனைகளை தாங்கிக் கொள்ள முடியாது அடிப்படை வசதிகள் கூட பூர்த்தி செய்ய முடியாத அவல நிலையில் இன்று வரை மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

2004 டிசம்பர் 26 காலை 7 மணியளவில் உருவெடுத்த அலையானது பேரலையாக பொங்கி எழுந்து லட்சம் உயிர்களை காவு கொண்டு விட்டது.

சுமாத்திரா தீவுப்பகுதியில் தகட்டோடு விலகியதன் காரணமாகவே சுனாமி பேரலை உருவெடுத்தது என்று விஞ்ஞானிகள் பல விதமான ஆதாரங்களை முன்வைத்தார்கள்.

ஆனாலும் என்ன பயன்? கடந்த நாட்கள் மீண்டும் வரவா போகின்றது. இவற்றிலும் துரதிஷ்ட்டம் என்னவென்றால் இலங்கையை பொருத்த மட்டில் ஆழிப்பேரலை தாக்கி ஆயிரக்கணக்கான உயிர்களை பலியெடுத்ததன் பின்னரே பலருக்கும் தெரிய வந்தது இதுதான் சுனாமி என்று.

அன்றைய தினம் இலங்கை மட்டுமல்ல இந்தியா, இந்தோனேசியா, அந்தமான், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் லட்சக்கணக்கான உயிர்களை பலியெடுத்தது.

சுனாமி எனும் பேரலையின் கோரத்தாண்டவம் முடிவடைந்து இன்றோடு 12 வருடங்கள் நிவர்த்தியாகின்றன. ஆழிப்பேரலையால் அன்றைய தினம் அழுத மக்கள் ஒரு புறம்.

இன்றுவரை தினம் தினம் கண்ணீர் வீடும் மக்கள் ஒருபுறம் என சுனாமியின் தாக்கம் இன்று வரை இடைவிடாது தொடர்கின்றது.

எதிர்பாராத சோகத்தினால் இழந்த எமது சொந்தங்களையும், அவர்களின் நினைவுகளையும் மீட்டுப்பார்க்கும் நாள் இது, கண்ணீருடன் நினைவு கூறுவோம். அதேநேரம் இறைவனையும் பிரார்த்திப்போம் வரலாற்றில் இதேபோல் இன்னுமோர் சுனாமி வரக்கூடாது என்பதற்காக.