சர்வதேச விமான நிலையமொன் றின் கதவுகளை உடைத்துக்கொண்டு கார் ஒன்று வேகமாக விமான நிலையத்துக்குள் நுழைந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.
கஸாந் நகரிலுள்ள கஸான் சர்வதேச விமான நிலையத்தின் கண்ணாடி கதவுகளை தகர்த்துக்கொண்டு இக்கார் உள்ளே நுழைந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விமான நிலைய கட்டடத்துக்குள் நுழைந்தவுடன் கார் நிறுத்தப்படவில்லை. அந்நபர் தொடர்ந்தும் காரை செலுத்திக் கொண்டிருந்தார்.
பின்னர் விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேறும் பகுதியின் கதவையும் அக்கார் தகர்த்தது. அவ்வேளையில் பொலிஸாரால் அக்காரை வழிமறித்து நிறுத்த முடிந்தது.
அதன்பின் காரின் சாரதியான ரஸ்லன் நுர்ட்டின்வோ (40) கைது செய்யப்பட்டார். அவர் மது போதையில் இருந்தார் என ரஷ்ய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையின்போது, தனது காதலி உள்ளூர் ரயில் நிலையத்தை வந்தடையவிருந்ததாகவும் அவரை வரவேற்பதற்குச் செல்வதற்காக விமான நிலையத்துக்கு ஊடாக தான் காரை செலுத்தியதாகவும் கூறினாராம்.
மேற்படி சம்பவத்தால் எவரும் காயமடையவில்லை. ஆனால், நீர்விநியோக குழாய் உடைந்ததால் கட்டடத்துக்குள் தண்ணீர் வழிந்தோடி வெள்ளம் ஏற்படத் தொடங்கியது.
ரஸ்லன் நுர்ட்டின்வோவுக்கு 15 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை, கட்டடங் களை சேதப்படுத்தியமை தொடர்பாக மேலும் இரு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.






