33,000 அடி (10,000 மீற்றர்) உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து உயிர் தப்பி, 44 வருடங்கள் உயிர்வாழ்ந்த பெண்ணொருவர் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
சேர்பியாவைச் சேர்ந்த வெஸ்னா வுலோவிக் என்பவரே இப்பெண்ணாவார். மேற்படி அனர்த்தத்தில் ஆச்சரியகரமாக உயிர்தப்பிய அவர் தனது 66 வயதில் இறந்துள்ளார்.
1972 ஜனவரி 26 ஆம் திகதி மேற்படி விமான அனர்த்தம் இடம்பெற்றது. அப்போது 23 வயது யுவதியாக இருந்த வெஸ்னா வுலோவிக், யூகோஸ்லாவியாவின் (சேர்பியா, பொஸ்னியா, குரோஷியா உட்பட பல குடியரசுகள் ஒன்றிணைந்த நாடு) விமான சேவை நிறுவனமான யூகோஸ்லாவ் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார்.
1972 ஜனவரி 26 ஆம் திகதி யூகோஸ்லாவ் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் டக்ளஸ் டி.சி 9 விமானமொன்றில் வெஸ்னா வுலோவிக் பணியில் இருந்தார். அவ்விமானம் சுவீடனின் ஸ்டொக்ஹோம் நகரிலிருந்து புறப்பட்டு டென்மார்க்கின் கொப்பன்ஹேகன் நகரில் தரையிறங்கிய பின் யூகோஸ்லாவியாவின் தலைநகர் பெல்கிரேட்டை நோக்கிப் புறப்பட்டது.
அதன்பின் செக்கஸ்லோவாக்கியாவின் (தற்போதைய செக் குடியரசின்) மலைப்பிராந்தியம் ஒன்றுக்கு மேலாக பறந்து கொண்டிருந்தபோது அவ்விமானம் வெடித்துச் சிதறியது.
யூகோஸ்லாவியாவைச் சேர்ந்த கிளர்ச்சிக் குழுவொன்றினால் விமானத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததாக கருதப்படுகிறது.
அப்போது 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த மேற்படி விமானத்தில் அவ்வேளையில் மொத்தமாக 28 பேர் இருந்தனர். அவர்களில் 27 பேர் பலியாகினர். ஆனால், வெஸ்னா வுலோவிக் மாத்திரம் உயிர்தப்பினார்.
விமானப் பணிப்பெண்ணான வெஸ்னா, விமானம் கீழே விழத்தொடங்கியபோது, விமானத்தின் வால்பகுதியில் உணவு வண்டியொன்றுக்கிடையில் அகப்பட்டிருந்தார்.
விமானத்தின் வால்பகுதியானது மரங்கள் அடர்ந்த அதிகளவான பனி பொழிந்திருந்த பகுதியில் வீழ்ந்தது.
மரங்களும் பனிப்படிவுகளும் ஒரு குஷன் போன்று அமைந்ததால் விமானத்தின் வால்பகுதி நொருங்காமல் இருந்தது. விமா னம் வீழ்ந்து சில மணித்தியாலங்களின் பின், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களால் வெஸ்னா வுலோவிக் மீட்கப்பட்டார்.
அவர் மிக மோசமாக படுகாயமடைடைந்திருந்தார். மண்டையோட்டில் வெடிப்பு ஏற்பட்டிருந்தது, கால்கள், இடுப்பு எலும்பு, விலா எலும்புகளில் முறிவுகள் ஏற்பட்டிருந்தன. வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வெஸ்னா வுலோவிக் 10 நாட்கள் கோமா நிலையில் இருந்தார்.
சிறிது காலம் அவரின் உடல் இடுப்புக்குக் கீழ் இயங்கவில்லை. அவரை குணப்படுத்துவதற்காக பல்வேறு சத்திரசிகிச்சைகள் செய்யப்பட்டன. பல மாதங்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்த வெஸ்னா பின்னர் எழுந்து நடமாடியதுடன் மீண்டும் யூகோஸ்லோவ் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் வேறொரு பணியில் இணைந்தார். எனினும், மேற்படி விமான அனர்த்தம் குறித்த எந்த நினைவும் அவருக்கு மீளத் திரும்பவில்லை.
2008 ஆம் ஆண்டு நியூயோர்க் டைம்ஸுக்கு அளித்த செவ்வியொன்றில், நான் உடைந்து நொறுங்கினேன். மருத்துவர்கள் என்னை மீள ஒன்றிணைத்தனர்’ எனக் கூறியிருந்தார்.
33,000 அடி (10,000 மீற்றர்) உயரத்திலிருந்து பரசூட் உதவியின்றி வீழ்ந்து உயிர்தப்பியதால், உலகில் அதிக உயரத்திலிருந்து பரசூட் இன்றி வீழ்ந்து உயிர்தப்பியவராக 1985ஆம் ஆண்டு வெஸ்னா வுலோவிக் கின்னஸ் சாதனையாளராக அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
66 வயதான வெஸ்னா வுலோவிக், கடந்த வெள்ளிக்கிழமை சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேட்டிலுள்ள தனது வீட்டில் இறந்தார் என சேர்பிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அவரின் மரணத்துக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை.









