சம்பியன்ஸ் லீக் : பாகிஸ்தான் அணிக்கு அனுமதி வழங்கிய இந்தியா!!

577

pak

இந்தியாவில் விரைவில் தொடங்கும் சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி பங்கேற்பதற்கு இந்திய மத்திய அரசு விசா வழங்கியுள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் எதிர்வரும் 21ம் திகதி முதல் அக்டோபர் 6ம் திகதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

முன்னதாக வருகிற 17ம் திகதி முதல் 20ம் திகதி வரை சம்பியன்ஸ் லீக் தகுதி சுற்று போட்டிகள் மொகாலியில் நடக்கிறது. தகுதி சுற்றில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் (இந்தியா), ஒட்டகோ வோல்ட்ஸ் (நியூசிலாந்து), கந்துரட மரூன்ஸ் (இலங்கை) ஆகிய அணிகளுடன் பைசலாபாத் வோல்வ்ஸ் (பாகிஸ்தான்) அணியும் பங்கேற்கிறது.

தகுதி சுற்று முடிவில் இரு அணிகள் பிரதான சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி சம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டு விட்டது என்று செய்திகள் கசிந்தன.

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தின் அத்து மீறல் அதிகரித்து வருவதால் மிகுந்த முன் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பு கருதியும் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

இதற்கு முன்னாள் வீரர் சோயிப் அக்தர் உள்பட பலர் அதிருப்தி தெரிவித்தனர்.

இதற்கிடையில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணிக்கு விசா அனுமதி ஏற்கனவே அளிக்கப்பட்டு விட்டது என்றும் கடவுச்சீட்டு கொடுக்கப்பட்டு விட்டதாகவும் இந்திய தூதகரத்தில் பெற்று கொள்ளலாம் என்று தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.